மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்ப உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்ப உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 March 2019 4:00 AM IST (Updated: 21 March 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மலைக்கோட்டை,

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தெப்பத்திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் 7 மணிக்கு பல்வேறு வகையான வாகனத்தில் சுவாமியும்-அம்பாளும் மலைக்கோட்டை உள்வீதி, வெளிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக நேற்று மதியம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாள் புறப்பாடாகி மலைக்கோட்டை உள்வீதி, சின்னக்கடைவீதி, என்.எஸ்.பி.ரோடு வழியாக தெப்பக்குளத்தை சுற்றி வந்து தெப்பக்குளத்தில் தயார் நிலையில் இருந்த தெப்பத்தில் இரவு 7.55 மணிக்கு எழுந்தருளினர். குளத்தை 5 முறை தெப்பம் சுற்றி வந்தது. பின்னர் தெப்பக்குளத்தின் நடுபகுதியில் உள்ள நீராழி மண்டபத்தில் சுவாமியும்-அம்பாளும், பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி

பின்னர் இரவு 10 மணிக்கு மேல் தெப்பத்தில் இருந்து சுவாமி-அம்பாள் மீண்டும் வெளியில் வந்தனர். பின்னர் நந்திகோவில் தெரு, ஆண்டார்வீதி, சறுக்குப்பாறை வழியாக இரவு 12 மணியளவில் கோவிலை சென்றடைந்தனர். விழாவையொட்டி தெப்பக்குளத்தின் நடு பகுதியில் உள்ள நீராழி மண்டபம் உள்பட தெப்பக்குளம் சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் தெப்ப உற்சவத்தை பக்தர்கள் பார்க்க வசதியாக தெப்பக்குளத்தை சுற்றியும் போடப்பட்டிருந்த அனைத்து தரைக்கடைகளும் நேற்று முன்தினமே அகற்றப்பட்டது.

இன்று காலை 11 மணியளவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியுடன் தெப்பத்திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். தெப்பத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story