திருவெண்ணெய்நல்லூர் பகுதியில், பள்ளி சீருடையில் மதுபாட்டில்கள் விற்ற மாணவி - சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு


திருவெண்ணெய்நல்லூர் பகுதியில், பள்ளி சீருடையில் மதுபாட்டில்கள் விற்ற மாணவி - சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 March 2019 11:30 PM GMT (Updated: 20 March 2019 9:05 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பள்ளி சீருடையில் மதுபாட்டில்கள் விற்ற மாணவியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 வயதுடைய மாணவி, 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், பள்ளி சீருடையுடன் ஒரு கைப்பையுடன், தெருத்தெருவாக சென்றார். அந்த மாணவியை கண்டதும், மதுபிரியர்கள் ஓடி வருகிறார்கள்.

பின்னர் அந்த மாணவி, தான் பையில் வைத்திருந்த மதுபாட்டில்களை மதுபிரியர்களுக்கு விற்பனை செய்கிறார். அதனை மதுபிரியர்கள் போட்டி, போட்டு வாங்கிச்செல்கிறார்கள். இதை சிலர், தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வாட்ஸ்-அப், முகநூலில் வைரலானது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், வீடியோ தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார், மதுபாட்டில்கள் விற்பனை செய்த மாணவி குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த மாணவி, திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடைய தந்தை மதுபாட்டில்கள் விற்பனை செய்யுமாறு மாணவியிடம் கொடுத்து அனுப்பி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story