வேனில் கொண்டு வந்த போது சிக்கியது: மதுரையில் 80 கிலோ தங்கம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
சேலத்தில் இருந்து மதுரைக்கு வேனில் கொண்டு வந்த 80 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரை,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையிலும், சட்டம்– ஒழுங்கை பாதுகாக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான நடராஜன் உத்தரவின் பேரில், தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம், மதுரை மாவட்டம் மேலூர் சுங்கச்சாவடியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியே 64 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து மதுரைக்கு வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் பெட்டி, பெட்டியாக தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
இதனை பார்த்த போலீசார், உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து வேனில் கொண்டு வரப்பட்ட தங்க கட்டிகள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து, முறையான ஆவணங்கள் கொண்டு வரும்படி வேனில் வந்தவர்களிடம் கூறினர்.
இதனையடுத்து, அந்த வேனை பறக்கும் படை அதிகாரிகள் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு பறிமுதலான தங்க நகைகள் குறித்து மதிப்பிடப்பட்டது.
வேனில் மொத்தம் 80 கிலோ தங்க கட்டிகள்–நகைகள் இருந்ததாகவும், அதன் மதிப்பு ரூ.16 கோடி வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த தங்க கட்டிகள் மதுரையில் உள்ள நகை கடைகளுக்கு நகைகள் செய்வதற்காக கொண்டு வரப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் 80 கிலோ அளவுக்கு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது தொடர்பாக தீவிர விசாரணையும் நடந்து வருகிறது.