ஆசிரியைக்கு பாலியல் தொல்லை; அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு


ஆசிரியைக்கு பாலியல் தொல்லை; அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 March 2019 11:15 PM GMT (Updated: 21 March 2019 6:40 PM GMT)

திட்டச்சேரி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

திட்டச்சேரி,

நாகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் ஆபாச படம் எடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திட்டச்சேரி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரை கிராமத்தில் ஒரு பெண் திருமணமான சில வருடங்களிலேயே கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த பெண் நாள்தோறும் பள்ளிக்கு சென்று வரும் வழியில் வடகரை கிராமத்தை சேர்ந்த சிராஜுதீன், அமானுல்லா, நூர்முகமது ஆகிய 3 பேரும் நின்று கொண்டு அந்த பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாக தெரிகிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பணி முடிந்து வீடு திரும்பிய அந்த ஆசிரியையை வழிமறித்து சிராஜுதீன் உள்பட 3 பேரும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். அப்போது அங்கிருந்து தப்பி சென்ற அந்த பெண் இதுகுறித்து திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் சிராஜுதீன், அமானுல்லா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நூர்முகமது என்பரை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிராஜுதீன், அ.தி.மு.க. வடகரை ஊராட்சி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story