பொதுமக்களுக்கு தாம்பூலம், அழைப்பிதழ் கொடுத்து தேர்தலில் தவறாமல் வாக்களிக்கும்படி கலெக்டர் வேண்டுகோள்


பொதுமக்களுக்கு தாம்பூலம், அழைப்பிதழ் கொடுத்து தேர்தலில் தவறாமல் வாக்களிக்கும்படி கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 March 2019 10:30 PM GMT (Updated: 21 March 2019 6:43 PM GMT)

வாக்காளர்களுக்கு தாம்பூலம், அழைப்பிதழ் கொடுத்து தேர்தலில் தவறாமல் வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பங்கேற்றார்.

திருவள்ளூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் திருவள்ளூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.

இந்த பேரணியில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை சேர்ந்த பணியாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் அவர்கள் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அழைப்பிதழ்களை சீர்வரிசை பொருட்களுடன் மேள வாத்தியம் முழங்க வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என்று கூறி அழைப்பிதழ்களை வழங்கினார்கள். இந்த பேரணியானது திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

பேரணியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படப்பை ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரபாபு, சாய் கிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அங்குள்ள வாக்காளர்களிடம் வாக்குப்பதிவு தினத்தன்று தாங்கள் தவறாமல் வாக்களித்து தேர்தல் கடமையாற்ற வேண்டும் என்னும் வாசகங்கள் அடங்கிய பத்திரிகையுடன் பூ, பழம், வெற்றிலை பாக்கு, இனிப்புடன் தாம்பூலம் வைத்து அழைப்பு விடுத்தனர்.

அப்போது அவர்களுடன் மேலாளர் ஜார்ஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு, ஊராட்சி செயலாளர் முகம்மது ஆரிப் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story