பறக்கும் படையினர் வாகன சோதனை: நெல்லையில் ஏ.டி.எம். மையங்களுக்கு எடுத்துச்சென்ற ரூ.12 லட்சம் பறிமுதல்


பறக்கும் படையினர் வாகன சோதனை: நெல்லையில் ஏ.டி.எம். மையங்களுக்கு எடுத்துச்சென்ற ரூ.12 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2019 11:15 PM GMT (Updated: 21 March 2019 7:54 PM GMT)

நெல்லையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், ஏ.டி.எம். மையங்களுக்கு எடுத்துச்சென்ற ரூ.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. புளியரையில் 18½ பவுன் நகை சிக்கியது.

நெல்லை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைமுருகன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுத்துச்செல்லும் தனியார் நிறுவன வேன் ஒன்று வந்தது. அந்த வேனை மறித்து பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அதில் ரூ.68 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தில் ரூ.56 லட்சத்துக்கு முறையான ஆவணங்கள் இருந்தன. ஆனால், ரூ.12 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் ரூ.12 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நெல்லை தாசில்தார் சுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

பாளையங்கோட்டையில் நேற்று அதிகாலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மகாலட்சுமி தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள், திசையன்விளையை சேர்ந்த பாலசிங் கோயில்ராஜ் என்பவர் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.5 லட்சத்து 81 ஆயிரத்து 730-ஐ பறிமுதல் செய்து தாசில்தார் கனகராஜூவிடம் ஒப்படைத்தனர்.

தமிழக, கேரள எல்லையான நெல்லை மாவட்டம் புளியரையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ரோஷன் பேகம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து, அதில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஊத்துமலையை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் முருகன் என்பது தெரியவந்தது. அவரிடம் 18½ பவுன் நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த நகை, பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, செங்கோட்டை தாசில்தார் வெங்கடாச்சலத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்து நகை, பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கட்டிட ஒப்பந்ததாரர் முருகனிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை மொத்தம் ரூ.1 கோடியே 56 லட்சத்து 898 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Next Story