மாவட்ட செய்திகள்

தார்வார் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு : இடிபாடுகளுக்குள் 12 மாணவிகள் சிக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் + "||" + 13 killed in Darwara building collapse: 12 students were trapped inside the rubble

தார்வார் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு : இடிபாடுகளுக்குள் 12 மாணவிகள் சிக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல்

தார்வார் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு : இடிபாடுகளுக்குள் 12 மாணவிகள் சிக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல்
தார்வாரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் இடிபாடுகளுக்குள் 12 மாணவிகள் உயிருடன் சிக்கி இருக்கும் அதிர்ச்சிதகவல் நேற்று வெளியானது.

உப்பள்ளி,

மாணவிகளை உயிருடன் மீட்க மீட்புக்குழுவினர் போராடி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடிகளை கொண்ட தனியார் வணிக வளாக கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. கட்டுமான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்துள்ளது.

இதனால் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் கடைகள், கம்ப்யூட்டர் பயிற்சி மையம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வந்துள்ளன.

திடீரென்று 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள், கடைகளில் பணியாற்றியவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கு வந்த மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

சம்பவம் நடந்த முதல் நாளில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 60-க்கும் மேற்பட்டோர்களை தீயணைப்பு படையினர், போலீசார், பொதுமக்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். முதல் நாளில் 2 பேர் பிணமாக மீட்கப் பட்டனர்.

அதோடு இரவு பகலாக மீட்பு பணிகள் நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் 2-வது நாள் மீட்பு பணியின்போது 5 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்த நிலையில் நேற்று 3-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன. நேற்று மேலும் 6 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து கட்டிடம் இடிந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

இச்சம்பவத்தில் பலியானோரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பலியானவர்கள் மகேஷ்(வயது 62), அவருடைய மகன் அஜீத்(28), சலீம், மகபூப், மகபூப் தேசாய், அஸ்லாம் சரீக், திவ்யா(8), தாட்சாயிணி(45), சங்கமேஷ் மான்வி(42) உள்பட 13 பேர் என்று தெரியவந்துள்ளது. அதில் 4 பேரின் பெயர் விவரங்கள் தெரியவில்லை.

மீட்பு பணிகள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

“5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இதுவரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கட்டிடத்திற்குள் யாரும் உயிரோடு இருக்கிறார்களா என்று நவீன எந்திரங்கள் மூலம் சோதனை மேற்கொண்டோம். அதில் ஒரு பெரிய தூணுக்கு அடியில் பலர் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கு வந்த 12 மாணவிகளாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்பு பணி முழுவதுமாக முடிவடைந்த பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும். போலீசார், தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் என 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இடிந்து விழுந்த கட்டிடம் 3 மாடிகளை கட்டிக் கொள்ள மட்டுமே அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் அனுமதியை மீறி சட்டவிரோதமாக 5 மாடிகளை கட்டி உள்ளனர். மேலும் அந்த கட்டிடத்தை தாங்கும் அளவிற்கு வலுவாக தூண்கள் அமைக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அதுபற்றி விசாரித்து வருகிறோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நேற்று காலையில் மாவட்ட பொறுப்பு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்து கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் அறிவுறுத்தினார். இதேபோல் மாவட்ட கலெக்டர் தீபா ராஜராஜசோழன் ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

இதுபற்றி முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கண்டறிந்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும். இதுகுறித்து மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. மண்ணடியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பெண் பலி
மண்ணடியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
2. உத்திரமேரூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
உத்திரமேரூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
3. பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி; நேர்முக தேர்வுக்கு வந்த போது பரிதாபம்
பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வந்தபோது 2 பேர் பலியானார்கள்.
4. திருச்சியில் பரிதாபம்: ‘ஹெல்மெட்’ அணிந்து சென்றும் லாரி சக்கரத்தில் சிக்கி அதிகாரி பலி
திருச்சி தென்னூரில் ‘ஹெல்மெட்’ அணிந்து சென்றும் லாரி சக்கரத்தில் சிக்கி அதிகாரி ஒருவர் பலியானார்.
5. 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடுகோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.