தூத்துக்குடியில் அனல்மின் நிலையம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி வழக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


தூத்துக்குடியில் அனல்மின் நிலையம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி வழக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 March 2019 4:15 AM IST (Updated: 23 March 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அனல்மின் நிலையம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தூத்துக்குடியை சேர்ந்த பாலசிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் “தூத்துக்குடி துறைமுகநகர், கோவில்பிள்ளைநகர், முத்துநகர், ஒத்தவீடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்திற்கு சொந்தமாக கடற்கரை அருகே அமைந்துள்ள 36.81 எக்டர் பரப்பளவு நிலத்தை கோயில்பிள்ளை நகருக்கு வ.உ.சிதம்பரம் துறைமுகம் சார்பில் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலத்தை தற்போது அனல் மின்நிலையம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே தூத்துக்குடி துறைமுக பகுதியில் ஒரு அனல் மின் நிலையம் உள்ளது.

தற்போது அதே பகுதியில் மற்றொரு அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகளை செய்து வருகிறார்கள். ஒரு அனல் மின்நிலையத்துக்கும், மற்றொரு அனல் மின்நிலையத்துக்கும் குறைந்தபட்சம் 20 கிலோ மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த 2 அனல் மின் நிலையங்களுக்கு இடையே 10 கிலோ மீட்டர் தூரம்தான் இடைவெளி உள்ளது. மேலும் இதேபகுதியில் விமான நிலைய ஓடு பாதையும் உள்ளது.

புதிதாக அமைக்கப்படும் அனல்மின் நிலையத்தால் பொதுமக்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் புதிய அனல்மின் நிலையம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதி, டெண்டர் உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும். இதற்கான பணிகளை செய்வதற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story