7 சட்டமன்ற தொகுதிகளுக்கு ரகசிய முறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு கலெக்டர் சிவஞானம் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ரகசிய முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் சிவஞானம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் கமிஷனின் செலவின பார்வையாளராக ராஜ்சென்குப்தா மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த என்னட்டி பாஸ்கரராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் கடந்த 2 நாட்களாக முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டதுடன் வேட்பாளர்களின் செலவினக்கணக்கை ஆய்வு செய்வதற்கான அலுவலர்களையும் தேர்வு செய்தனர்.
வேட்பு தாக்கல் முடிந்த பின்பு அவர்கள் மீண்டும் தொகுதிக்கு வர உள்ளனர். இதே போன்று இடைத்தேர்தல் நடைபெறும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த ரன்பீர்சிங்வர்மா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தொகுதிக்கு வரவுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 1,889 வாக்குச்சாவடிகளுக்கு 9,800 அலுவலர்கள் தேவைப்படும் நிலையில் 10 ஆயிரத்து 800 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 9,800 பேர் ரகசிய முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் எந்த அலுவலருக்கும் எந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு நியமனம் செய்யப்படுவோம் என்பது தெரியாது. அவர்களுக்கான நியமன உத்தரவு வழங்கப்பட்ட பின்பு அவர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ பதிவு செய்வதற்கான் ஏற்பாடுகள் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் செய்து தரப்படும். மேலும் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்களுக்கான பயிற்சி நாளை(ஞாயிற்றுக்கிழமை) அனைத்து தாலுகாக்களிலும் மண்டல அலுவலர்களால் வழங்கப்படும்.
இம்மாவட்டத்திலுள்ள 1,889 வாக்குச்சாவடிகளுக்கும் 4,949 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 2,727 கட்டுப்பாட்டு எந்திரங்கள் 2,987 வாக்கு காகித தணிக்கை எந்திரங்கள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே கையிருப்பில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் முறையாக செயல்படுகின்றனவா என ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குபதிவு எந்திரங்கள் நாளை(இன்று) ரகசிய முறையில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேவைப்படும் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். எந்த சட்டமன்ற தொகுதிக்கு எந்த வாக்குப்பதிவு எந்திரம் ஒதுக்கீடு செய்யப்படும் என கண்டறியமுடியாத வகையில் ஒதுக்கீடு நடைபெறும்.
மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும்படை ஆய்வுக்குழுவினர் வாகன சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆய்வுக்குழுவில் லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பது பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி–விஜில் என்ற செயலி மூலம் புகார் செய்யப்படும் பட்சத்தில் புகார் செய்யப்பட்ட 100 நிமிடங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் செய்வதற்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1950 என்ற டெலிபோன் மூலமோ அல்லது புதிதாக ஏற்பாடு செய்துள்ள புதிய கட்டணமில்லா டெலிபோன் மூலமோ புகார் செய்யலாம். மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் இறுதி நாள் அன்று மதியம் 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன்பின்னரும் அவர்களிடம் இருந்து வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். வேட்புமனு தாக்கலில் வேட்பாளருக்கு உதவுவதற்காக தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 18–ந்தேதி வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்குள் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு எவ்வளவு நேரமானாலும் அவர்கள் வாக்குப்பதிவு செய்ய வாய்ப்பு தரப்படும். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சான்று காட்டி வாக்களிக்கலாம்.
இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் நேர்மையாக சுதந்திரமான தேர்தல் நடைபெற விதிமுறைப்படி நடந்து முழுஒத்துழைப்பு தர வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜெகவீர பாண்டியன், தேர்தல் பிரிவு அதிகாரி லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.