நெல்லை தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 5 பேர் வேட்புமனு தாக்கல்
நெல்லை தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 5 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நெல்லை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு ஏற்கனவே 2 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு செய்து இருந்தனர். தென்காசி தொகுதிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்தனர்.
இந்த நிலையில் நெல்லை தொகுதியில் போட்டியிட ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் சிவசங்கரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஷில்பாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து சுயேச்சையாக பிரவீன்குமார், மணிகண்டன், பீரிடன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா, கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் ஷில்பாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நெல்லை தொகுதியில் போட்டியிட இதுவரை மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தென்காசியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான உதவி கலெக்டர் சவுந்திரராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கோடுகள் போடப்பட்டு உள்ளன. அந்த இடத்திலேயே போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி, அவர்களிடம் சோதனை நடத்திய பிறகுதான் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள்.
Related Tags :
Next Story