தேர்தலை புறக்கணிப்பதாக கண்களில் கருப்புத்துணி கட்டி விவசாயிகள் போராட்டம்


தேர்தலை புறக்கணிப்பதாக கண்களில் கருப்புத்துணி கட்டி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 23 March 2019 9:31 PM GMT (Updated: 23 March 2019 9:31 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக கூறி விவசாயிகள் கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் வறட்சியை போக்குவதற்காக முல்லைப்பெரியாறு வாய்க்கால் பாசன திட்டத்தை நிறைவேற்றகோரி இப்பகுதி விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும் எந்த பயனும் இல்லை. இதைத்தொடர்ந்து, ஆண்டிப்பட்டி ஒன்றியத்திலுள்ள 30 ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து, அரசை வலியுறுத்தி ஒவ்வொரு ஊராட்சியிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினர்.

ஆனால் எந்த அரசியல் கட்சியும் முல்லைப்பெரியாறு வாய்க்கால் பாசன திட்டத்தை ஏற்று தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிடவில்லை. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் ஆலோசனை கூட்டம் போட்டு, தேர்தலை புறக்கணித்து, வீடுகளில் கருப்பு கொடி கட்டுவதாக அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 152 கிராமங்களில் தேர்தலை புறக்கணிப்பதாக, விவசாயிகள் நேற்று முன்தினம் வீடுகளில் கருப்பு கொடி கட்டினர்.

2-வது நாளான நேற்று ஆண்டிப்பட்டி அருகே உள்ள கீ.காமாட்சிபுரம் கிராமத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி விவசாயிகள் கண்களில் கருப்புத்துணி கட்டியும், பெண்கள் காலிகுடங்களுடனும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முல்லைப்பெரியாறு வாய்க்கால் பாசன திட்டத்தை நிறைவேற்ற கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story