பா.ஜனதாவா? சிவசேனாவா? கூட்டணியில் பெரிய அண்ணன் யார்? ராவ் சாகேப் தன்வே பதில்


பா.ஜனதாவா? சிவசேனாவா? கூட்டணியில் பெரிய அண்ணன் யார்? ராவ் சாகேப் தன்வே பதில்
x
தினத்தந்தி 23 March 2019 11:30 PM GMT (Updated: 23 March 2019 9:32 PM GMT)

மராட்டியத்தில் பெரிய அண்ணன் பா.ஜனதாவா? சிவசேனாவா? என்பதை தேர்தல் முடிவு செய்யும் என பா.ஜனதா மாநில தலைவர் ராவ் சாகேப் தன்வே கூறியுள்ளார்.

மும்பை, 

நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது பெரிய அண்ணன் யார்? என்ற பிரச்சினை மேலோங்கி இருந்தது. ஆனாலும் ஒரு வழியாக கூட்டணி அமைந்து விட்டது.

இது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- சிவசேனா கட்சி பா.ஜனதாவையும், அதன் தலைவர்களையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தது. இந்த சூழலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி எப்படி உருவானது?

பதில்:- எங்கள் கூட்டணி 25 ஆண்டுகள் பழமையானது. கடந்த சட்டமன்ற தேர்தலை தவிர மற்ற எல்லா நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை கூட்டணி அமைத்தே சந்தித்து உள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட சிவசேனா எங்களை விட குறைவான இடங்களில் வெற்றி பெற்றது. அந்த நேரத்தில் இயற்கையாகவே அவர்கள் கட்சியை வளர்க்க விரும்புவார்கள். கடந்த 4 ஆண்டுகளாக கட்சி ரீதியாகவே அவர்கள் எங்களை விமர்சித்தனர். ஆனால் கூட்டணி அரசில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அரசின் எந்த திட்டங்களையும் அவர்கள் எதிர்க்கவில்லை. நாங்கள் அரசியல் கட்சிகள் தான். கட்சியை வளர்க்க வேண்டும். நாங்கள் ஒரே கொள்கை உடையவர்கள். கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக போராடி வருகிறோம். எனவே ஒரே கொள்கை உடைய நாங்கள் அரசியலில் இணைந்துதான் ஆக வேண்டும்.

கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து பிரிந்து இருந்த மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் போன்றவர்கள் எல்லாம் எங்களை வீழ்த்த ஒன்று சேர்ந்து இருக்கும் போது, ஒரே கொள்கை உடைய நாங்கள் (பா.ஜனதா-சிவசேனா) கட்டாயம் இணைந்தே ஆக வேண்டும்.

கேள்வி:- பா.ஜனதா, சிவசேனா தலைவர்கள் கூட்டணி வைக்க முடிவு செய்த நிலையில் 48 தொகுதியிலும் தேர்தலுக்கு தயாராகி வந்த கட்சி தொண்டர்கள் அந்த முடிவை எப்படி எதிர்கொண்டார்கள்?

பதில்:- தலைவர்களை விட தொண்டர்களே பா.ஜனதா, சிவசேனா கூட்டணியை விரும்பினார்கள். தொண்டர்கள் தான் கூட்டணிக்காக எங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். எதிர்பார்த்தது போலவே கூட்டணி உருவாகியது. இதில், உடன்பாடு இல்லாத சிலர் தங்களை சமாதானப்படுத்தி கொள்ளவேண்டும்.

கேள்வி:- 2 கட்சிகளுக்கும் ஒரே தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமா?

பதில்:- பா.ஜனதா தேசிய கட்சி. சிவசேனா மாநில கட்சி. 2 கட்சிகளுக்கும் ஒரே தேர்தல் அறிக்கை வெளியிடப்படாது. மாநில அளவில் சில பிரச்சினைகள் ஒரே மாதிரியாக இருக்கும். சில பிரச்சினைகளில் 2 கட்சிகளின் பார்வையும் வெவ்வேறு விதமாக இருக்கும்.

கேள்வி:- நானார் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் கைவிடப்பட்டதால் பா.ஜனதா, சிவசேனாவுக்கு பணிந்து விட்டது என எடுத்து கொள்ளலாமா?. பா.ஜனதாவை விட சிவசேனா பலமானதா?

பதில்:- இரண்டு, மூன்று கட்சிகள் ஒன்று சேரும் போது, சிலவற்றை விட்டு கொடுத்துதான் போகவேண்டும். கூட்டணி அரசில் நாம் எல்லோருக்கும் செவி கொடுக்க வேண்டும். நானார் சுத்திகரிப்பு திட்டத்துக்கு அவர்கள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனவே அந்த திட்டம் கைவிடப்பட்டது.

கேள்வி:- பா.ஜனதா சிவசேனாவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதால், அந்த கட்சி தான் தற்போதும் பெரிய அண்ணனாக உள்ளதா?

பதில்:- அவர்களின் 2,3 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதால் நிலைமை எப்படி மாறும்?. சில விஷயங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கும். மற்ற விஷயங்களில் பிரச்சினை இல்லை. இருகட்சிகளில் பெரிய அண்ணன் யார்? என்பதை தேர்தல் முடிவு செய்யும். வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கை அதை முடிவு செய்யும். தேர்தல் முடிவு வந்த பிறகு யார் பெரியவர், சிறியவர் என்பதை தீர்மானித்து கொள்ளலாம்.

கேள்வி:- மோடி அலை தற்போது உள்ளதா?

பதில்:- 2014-ம் ஆண்டை விட தற்போது மோடி அலை அதிகமாக உள்ளது. அரசின் செயல்பாட்டில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மோடியின் கையில் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என அவர்கள் உணர்கின்றனர்.

கேள்வி:- பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்களால் பா.ஜனதா ஆதாயம் பெறுகிறதா?

பதில்:- பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்கள் மக்கள் இடையே தேசப்பற்று உணர்வை பற்ற வைத்து உள்ளது. அது எங்களுக்கு பலனை தரும்.

கேள்வி:- மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் எந்த திட்டங்களில் கவனம் செலுத்தும்?

பதில்:- மாநிலத்துக்கு அதிகளவு நீர்வள திட்டங்கள் தேவைப்படுகின்றன. பெரிய அளவில் தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்படும். வேலை வாய்ப்பின்மை ஒழிக்கப்படும். நெடுஞ்சாலை, மும்பை, புனே விமான நிலையப்பணிகள், மெட்ரோ ரெயில் திட்டங்கள், கடற்கரை சாலை திட்டம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

கடந்த தேர்தலில் இரு கட்சிகளின் பலம்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் (2014) பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டன.

அந்த தேர்தலில் பா.ஜனதா 25 தொகுதிகளில் போட்டியிட்டு 23 இடங்களை வென்றது.

சிவசேனா 20 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த தடவையும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி ஏற்பட்டு உள்ள நிலையில் பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் (2014) இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. அப்போது பா.ஜனதா 122 இடங்களிலும், சிவசேனா 62 இடங்களிலும் வெற்றி பெற்று தங்களது பலத்தை காட்டின.

Next Story