துமகூரு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. போட்டியிடும் விவகாரம் : யாரிடமும் சென்று பிச்சை கேட்க மாட்டேன் - குமாரசாமி ஆவேசம்


துமகூரு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. போட்டியிடும் விவகாரம் : யாரிடமும் சென்று பிச்சை கேட்க மாட்டேன் - குமாரசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 23 March 2019 11:45 PM GMT (Updated: 24 March 2019 12:26 AM GMT)

துமகூரு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. போட்டியிடும் விவகாரம் தொடர்பாக யாரிடமும் சென்று பிச்சை கேட்க மாட்டேன் என்று முதல்-மந்திரி குமாரசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. துமகூரு தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில், முன்னாள் பிரதமர் தேவேகவுடா போட்டியிடுகிறார். இந்த நிலையில், துமகூரு தொகுதியில் தேவேகவுடாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக உள்ள முத்த ஹனுமேகவுடா சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இதனால் முதல்-மந்திரி குமாரசாமி, தேவேகவுடா ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் முத்த ஹனுமேகவுடாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

காங்கிரசுடனான கூட்டணியில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் எங்களது கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு போட்டியிடுவார்கள். துமகூரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி வேட்பாளராக முத்த ஹனுமேகவுடா போட்டியிடுவதாக அறிவித்திருப்பது பற்றி எனது கவனத்திற்கு வந்தது. அவர் சுயேச்சையாக போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் நீங்கள் (நிருபர்கள்) கேட்க வேண்டும்.

அது காங்கிரஸ் தலைவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதற்கும் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் யாரிடமும் சென்று பிச்சை கேட்க மாட்டேன். எனது சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் விதமாக நடந்து கொள்ள மாட்டேன். கூட்டணி விவகாரத்தில் எங்கள் வேலையை நாங்கள் செய்கிறோம். காங்கிரஸ் கட்சியினர், அவர்களின் வேலை செய்கின்றனர். எங்கள் கட்சி தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அதுவே எங்களது பலம்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

துமகூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உள்ள காங்கிரஸ் எம்.பி.யை சமாதானப்படுத்தும்படி காங்கிரஸ் தலைவர்களிடம், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் பேச மாட்டார்கள் என்பதை மறைமுகமாக முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். அதனால்தான் அவர், ‘‘தான் யாரிடமும் சென்று பிச்சை கேட்க மாட்டேன், சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் விதமாக நடந்து கொள்ள மாட்டேன்’’ என்று கூறி உள்ளார்.

ஏற்கனவே மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமிக்கு எதிராக போட்டியிடும் சுமலதாவுக்கு, அந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்தநிலையில் தற்போது துமகூரு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. முத்த ஹனுமேகவுடா தேவேகவுடாவுக்கு எதிராக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதனால் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இடையே மோதல் உருவாகி இருக்கிறது.

Next Story