வேலூர் மாவட்டத்தில் 18,848 வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கான பயிற்சி முதல் கட்டமாக இன்று தொடங்குகிறது


வேலூர் மாவட்டத்தில் 18,848 வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கான பயிற்சி முதல் கட்டமாக இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 24 March 2019 9:45 PM GMT (Updated: 24 March 2019 2:17 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 18,848 வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கான பயிற்சி முதல் கட்டமாக இன்று தொடங்குகிறது.

வேலூர், 

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 18–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 473 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் கடைகள் மற்றும் நிலைகண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். உரிய அனுமதியின்றி பணம் கொண்டு செல்வதை அவர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி முதல் கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் பயிற்சி தொடங்குகிறது. மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 473 வாக்குச்சாவடி மையங்களில், தேர்தல் பணிக்காக 18 ஆயிரத்து 848 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 13 சட்டமன்ற தொகுதிகளிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரக்கோணம் (தனி) தொகுதிக்கு அரக்கோணம் கனியூர் கிருஷ்ணாநகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியிலும், சோளிங்கர் தொகுதிக்கு நெமிலி தாலுகாவில் உள்ள சப்தகிரி பொறியியல் கல்லூரியிலும், காட்பாடி தொகுதிக்கு காந்திநகர் டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ராணிப்பேட்டை தொகுதிக்கு வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு பெண்கள் கலைக்கல்லூரியிலும், ஆற்காடு தொகுதிக்கு ஆற்காடு நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி நடக்கிறது. வேலூர் தொகுதிக்கு வேலூர் சங்கரன்பாளையத்தில் உள்ள டி.கே.எம். பெண்கள் கல்லூரியிலும், அணைக்கட்டு தொகுதிக்கு திருமலைக்கோடியில் உள்ள ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கே.வி.குப்பம் தொகுதிக்கு கே.எம்.ஜி. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பயிற்சி நடக்கிறது.

குடியாத்தம் (தனி) தொகுதிக்கு பேரணாம்பட்டில் உள்ள இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வாணியம்பாடி தொகுதிக்கு வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா பெண்கள் கல்லூரியிலும், ஆம்பூர் தொகுதிக்கு இந்து அரசுமேல்நிலைப்பள்ளியிலும், ஜோலார்பேட்டை தொகுதிக்கு நாட்டறம்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருப்பத்தூர் தொகுதிக்கு ஸ்ரீவிஜய் சாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது.

இந்த பயிற்சியில் ‘வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து பழுது ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்வது குறித்தும், வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்வது குறித்தும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு செய்யப்பட அடிப்படை வசதிகள் குறித்தும், தேர்தலில் பின்பற்றப்படவேண்டிய விதிகள், சட்ட வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட உள்ளது.

இந்த தகவலை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story