உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கும் விவகாரம்: தோட்டத்தில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு
மடத்துக்குளம் பகுதியில் உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக தோட்டத்தில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மடத்துக்குளம்,
விளை நிலங்கள் வழியே உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், கேபிள் வழியே மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களையும் நடத்தினார்கள்.
மடத்துக்குளம் அருகே மைவாடி பகுதியில் ஏராளமான உயர் அழுத்த மின்கோபுரங்கள் உள்ளன. மேலும் பொள்ளாச்சி–பழனி 4 வழிச்சாலை விரிவாக்க பணியும் நடைபெற உள்ளது. இந்த பணி நடைபெறும்போது இந்த பகுதியில் பாலங்களும் கட்டப்பட உள்ளது. இதற்காக நிலத்தை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் மைவாடி பகுதியில் கூடுதலாக உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே உயர் அழுத்த மின்கோபுரம்அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மின்சாரத்தை கேபிள் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தியும், மைவாடி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தின் நுழைவுவாயிலில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் கேட்டின் முன்பகுதியில் ஒரு விளம்பர பதாகை ஒன்றும் தொடங்கவிடப்பட்டுள்ளது. அதில் ‘‘உயர்அழுத்த மின்கோபுரம் வேண்டாம்’’ என்றும், ‘‘கேபிள் அமைத்திடுக என்றும் வாசகங்கள்’’ இடம் பெற்றுள்ளன.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது ‘‘விவசாய நிலங்களில் உயர்அழுத்த மின்கோபுரம் அமைப்பதால் அந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடிவது இல்லை. தானிய விளைச்சல் இல்லாததால் இந்த பகுதியில் உள்ள பறவைகள் இரைதேடி பல கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. எனவே கேபிள் மூலம் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.