ஆறுமுகநேரியில் பரிதாபம் சத்து மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் சாவு போலீசார் விசாரணை


ஆறுமுகநேரியில் பரிதாபம் சத்து மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 March 2019 9:30 PM GMT (Updated: 26 March 2019 7:36 PM GMT)

ஆறுமுகநேரியில் சத்து மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி திடீரென்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறுமுகநேரி, 

ஆறுமுகநேரியில் சத்து மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி திடீரென்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காணியாளர் தெருவில் வசிப்பவர் கருப்பசாமி (வயது 36). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி இந்திராணி (33). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

தொடர்ந்து இந்திராணி 7 மாத கர்ப்பமாக இருந்தார். அவர் தினமும் சத்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். வழக்கம்போல் நேற்று காலையில் இந்திராணி சத்து மாத்திரைகளை சாப்பிட்டார். அப்போது திடீரென அவருக்கு பனிக்குடம் உடைந்து, ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனே அவரை காயல்பட்டினம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

கர்ப்பிணி சாவு

ஆனாலும் இந்திராணியின் உடல்நிலை மோசம் அடைந்ததால், அவரை காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே இந்திராணி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த இந்திராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறுமுகநேரியில் சத்து மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி திடீரென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story