மணப்பாறையில் வாகன சோதனை: மீன் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்


மணப்பாறையில் வாகன சோதனை: மீன் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 March 2019 10:45 PM GMT (Updated: 29 March 2019 6:02 PM GMT)

மணப்பாறையில், வாகன சோதனையில் மீன் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மணப்பாறை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள். இதுஒருபுறம் இருக்க, தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும்பொருட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மணப்பாறை பகுதியில் நேற்று தேர்தல் அதிகாரி செந்தில்குமார் தலைமையில் பறக்கும் படையினர் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மீன் ஏற்றிச் சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சையது அலி (வயது 40) என்பவர் சென்னைக்கு சென்று மீன் விற்ற வகையில் வசூலான தொகையுடன் அங்கிருந்து மீண்டும் கேரளா நோக்கி செல்வது தெரிய வந்தது.

அவரிடம் அதற்கான ஆவணம் எதுவும் இல்லாததால், அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அந்த பணம் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும உதவி அதிகாரி காமராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story