கொள்ளிடம் அருகே, தீக்குளித்து பெண் தற்கொலை- கள்ளக்காதலன் கைது
கொள்ளிடம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோதண்டபாணி மகள் சங்கீதா (வயது 40). இவர் கணவனை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கொள்ளிடம் அருகே சாமியம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சங்கர் (36) என்பவருக்கும், சங்கீதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சங்கருக்கு திருமணமானது. அதன்பின்னரும் சங்கர், சங்கீதா ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சங்கீதா வீட்டிற்கு சங்கர் சென்றார். அப்போது 2 பேருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் உடல்கருகி சம்பவ இடத்திலேயே சங்கீதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story