“மோடி அலை ஓய்ந்து விட்டது; அவரால் ஆட்சிக்கு வர முடியாது” கி.வீரமணி பேச்சு
‘மோடி அலை ஓய்ந்து விட்டது. அவரால் இனி ஆட்சிக்கு வர முடியாது’ என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேசினார்.
தூத்துக்குடி,
‘மோடி அலை ஓய்ந்து விட்டது. அவரால் இனி ஆட்சிக்கு வர முடியாது’ என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேசினார்.
பொதுக்கூட்டம்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.யை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது. திராவிடர் கழக மாவட்ட தலைவர் பெரியாரடியான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனியசாமி வரவேற்றார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி அலை ஓய்ந்து விட்டது. அவரால் இனி ஆட்சிக்கு வரமுடியாது. பசு மாட்டுக்கு கொடுக்கும் பாதுகாப்பு நமக்கு இல்லை. திராவிடர் கழகம் இந்தியாவை பற்றி கவலைப்படும் கழகம். நாங்கள் பதவி கேட்கவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். மூடிய பள்ளிகளை திறந்தவர் காமராஜர். அதேபோல் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் மருத்துவக்கல்லூரிகளை மாவட்டம்தோறும் உருவாக்கினார். ஆனால் தற்போது அந்த கல்லூரிகளில் நம் பிள்ளைகளுக்கு இடம் இல்லை.
நோட்டாவுடன் போட்டி
2014-ம் ஆண்டு வேலை கிடைக்கும் என்ற உறுதியில் பா.ஜனதாவுக்கு இளைஞர்கள் வாக்களித்தனர். ஆனால் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. பா.ஜனதா வெற்றி பெற்ற பின் ரூ.15 லட்சம் தருவதாக மோடி கூறினார். ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. தமிழகத்தை மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
பா.ஜனதா கட்சி நோட்டாவுடன் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கனிமொழி எம்.பி.க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். அப்போது தான் தமிழகத்துக்கு ஒளி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், நெல்லை மண்டல தலைவர் பால்ராஜேந்திரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், ம.தி.மு.க. மாநகர செயலாளர் முருகபூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story