காதலிக்க வற்புறுத்தி பிளஸ்-2 மாணவி மீது திராவகம் வீசுவதாக மிரட்டல் வாலிபர் கைது


காதலிக்க வற்புறுத்தி பிளஸ்-2 மாணவி மீது திராவகம் வீசுவதாக மிரட்டல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 March 2019 10:15 PM GMT (Updated: 29 March 2019 8:10 PM GMT)

சேலத்தில், காதலிக்க வற்புறுத்தி பிளஸ்-2 மாணவி மீது திராவகம் வீசுவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில், அம்மாபேட்டை பாரதி நகரை சேர்ந்த அஜித்குமார் (வயது 22) என்பவர், அந்த மாணவியிடம் தன்னை காதலிக்க வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் மாணவியை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர், அவரை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டனர்.

இதனிடையே, சமீபத்தில் மாணவியின் வீட்டிற்கு சென்ற அஜித்குமார், அவரது பெற்றோரிடம் பெண் கேட்டதாகவும், அதற்கு வயது குறைவாக இருப்பதால் தற்போது திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று மாணவியின் பெற்றோர் கூறி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார், தன்னை காதலிக்கா விட்டால் உங்கள் மகள் மீது திராவகம் வீசுவேன் என்று மிரட்டல் விடுத்து சென்றார்.

இதனால் பயந்துபோன மாணவியின் பெற்றோர், இது தொடர்பாக அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி, பிளஸ்-2 மாணவி மீது திராவகம் வீசுவதாக மிரட்டல் விடுத்ததாக அஜித்குமார் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.பின்னர், அஜித்குமாரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story