கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்கு வரும் திருநங்கைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் - தென்னிந்திய கூட்டமைப்பினர் பேட்டி


கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்கு வரும் திருநங்கைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் - தென்னிந்திய கூட்டமைப்பினர் பேட்டி
x
தினத்தந்தி 30 March 2019 4:15 AM IST (Updated: 30 March 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்கு வரும் திருநங்கைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தென்னிந்திய கூட்டமைப்பினர் கூறினர். விழுப்புரத்தில் நேற்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அருணா, மோகனா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

விழுப்புரம்,

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 15-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியளவில் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் மிகப்பெரிய அளவில் ‘மிஸ் கூவாகம்’ நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். இது எங்களுடைய கலாசார நிகழ்வு.இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் ஒட்டுமொத்த திருநங்கைகளும் கலந்துகொள்கிறார்கள். ஏனெனில் மிஸ் கூவாகம் நடைபெறும் அதே நாளில் உலக திருநங்கையர் தினத்தையும் கொண்டாடுகிறோம்.

இவ்விழாவில் சாதனை படைத்த இளம் திருநங்கைகளுக்கும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த திருநங்கைகளுக்கும் விருது வழங்கப்படுகிறது. அதேபோல் மூத்த திருநங்கைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. விழாவில் திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்கிறார்கள். தற்போது தேர்தல் சமயம் என்பதால் காவல்துறையினர் அஜாக்கிரதையாக இல்லாமல் எங்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு அளிக்க வேண்டும். கூவாகம் கூத்தாண்டவர் கோவிலிலும் கூடுதல் பாதுகாப்பை வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் தேர்தல் விதிகள் மற்றும் கோர்ட்டு உத்தரவை காரணம் காட்டி நாங்கள் விளம்பர பதாகைகள் வைக்கவோ, சுவரொட்டி ஒட்டவோ அனுமதி தராமல் இருக்கக்கூடாது. ஏனெனில் நாங்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அல்ல. ஆகவே எங்களுக்கு விளம்பர பதாகை வைக்கவும், சுவரொட்டி ஒட்டவும் அனுமதி தர வேண்டும்.

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் குடிநீர் வசதி, உடை மாற்றும் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கலெக்டர் ஏற்படுத்தித்தர வேண்டும். இதை ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எதிர்பார்த்த அளவில் அங்கு வசதிகள் செய்யப்படவில்லை. அதேபோல் கூத்தாண்டவர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் திருநங்கை ஒருவரையும் உறுப்பினராக சேர்க்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூவாகம் கிராமம் விழுப்புரம் மாவட்டத்திலேயே இருக்க வேண்டும். அதனை புதிதாக உருவாக உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது திருநங்கைகள் ஷோபியா, ராதா உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story