‘ஸ்மார்ட்’ சிட்டி திட்டத்தில் ரூ.8 கோடியில் பணிகள்: தஞ்சை சிவகங்கை பூங்கா திடீர் மூடல்


‘ஸ்மார்ட்’ சிட்டி திட்டத்தில் ரூ.8 கோடியில் பணிகள்: தஞ்சை சிவகங்கை பூங்கா திடீர் மூடல்
x
தினத்தந்தி 4 April 2019 10:45 PM GMT (Updated: 4 April 2019 7:37 PM GMT)

சிவகங்கை பூங்காவில் ‘ஸ்மார்ட்’ சிட்டி திட்டத்தில் ரூ.8 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த நிலையில் பூங்கா திடீரென மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை நகரில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்று சிவகங்கை பூங்கா. இது தஞ்சை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. தஞ்சை மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டித்தருபவற்றுள் சிவகங்கை பூங்கா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த பூங்காவில் சுதந்திரதின பொன்விழா ஆண்டின் நினைவு தூண், அறிவியல் பூங்கா, நீர்வீழ்ச்சி, நீச்சல் குளம், உல்லாச படகு சவாரி, செயற்கை நீரூற்றுகள், சிறுவர்களுக்கான ரெயில், சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டரங்கம், தொங்கு பாலம், இருக்கைகள், புல்தரைகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்று உள்ளன.

நரி, சீமை எலி, மான்கள், மயில் உள்ளிட்டவையும் பூங்காவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் பூங்காவில் அறிவியல் பூங்கா, தொங்கு பாலம், செயற்கை நீரூற்று உள்ளிட்டவை தற்போது செயல்படாமல் உள்ளன. மேலும் சிறுவர்களுக்கான ரெயிலும் செயல்படாமல் உள்ளது.

இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மாநகராட்சி குப்பைக்கிடங்கு, அகழி சீரமைப்பு, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட 12 வகையான திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது சிறுவர்களுக்கான பலூன், காளை விளையாட்டு உள்ளிட்டவை செயல்பாட்டில் இருந்து வருகின்றன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை சிவகங்கை பூங்காவில் மட்டும் ரூ.8 கோடியே 10 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் பூங்கா மீண்டும் புதுப்பொலிவு பெற உள்ளது.

இந்த பூங்காவில் கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். இங்கு மர நிழலில் அமர்ந்து இளைப்பாற இருக்கைகள் மற்றும் செயற்கை நீரூற்று போன்றவை இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள். இந்த நிலையில் பூங்கா பராமரிப்பு பணிக்காக திடீரென மூடப்பட்டுள்ளது.

பூங்காவின் நுழைவுவாயில் மூடப்பட்டு அந்த கேட்டில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதில் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று பூங்காவை பார்வையிட குழந்தைகளுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிவகங்கை பூங்கா மீண்டும் புதுப்பொலிவை பெற உள்ளது. சிறுவர்களுக்கான புதிய ரெயில் மற்றும் ஸ்கேட்டிங் விளையாடுவதற்கான தளம், பூங்கா மற்றும் அகழியை சைக்கிளில் சுற்றி வந்து பார்க்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகின்றன. இந்த பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”என்றார்.

Next Story