நெல்லை, தென்காசி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் வினியோகம்


நெல்லை, தென்காசி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் வினியோகம்
x
தினத்தந்தி 7 April 2019 4:15 AM IST (Updated: 6 April 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேற்று வாக்காளர் பட்டியல் வினியோகிக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குள் அமைந்துள்ளன.

தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குள் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டசபை தொகுதிகளும் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் உள்ளன.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் 26 வேட்பாளர்களும், தென்காசி (தனி) தொகுதியில் 25 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களின் முகவர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அமர்ந்து, சரியான வாக்காளர்கள் வந்து ஓட்டு போடுகிறார்களா? தேர்தல் சரியாக நடைபெறுகிறதா? என்பதை கண்காணிப்பார்கள். இதற்காக அவர்களுக்கு அந்தந்த வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்படும்.

இதையொட்டி நெல்லை மற்றும் தென்காசி தொகுதியில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று அந்தந்த தொகுதி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் அதனை தங்களது கட்சி வேட்பாளர் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து வாக்காளர் பட்டியலை பெற்றுச் சென்றனர். கூடுதல் பிரதி எடுத்துக்கொள்ள வசதியாக வாக்காளர் பட்டியல் அடங்கிய சி.டி.யும். வழங்கப்பட்டது.

Next Story