தாம்பரம் அருகே இளம்பெண் மர்ம சாவு உறவினர்கள் புகாரால் வாலிபரிடம் விசாரணை


தாம்பரம் அருகே இளம்பெண் மர்ம சாவு உறவினர்கள் புகாரால் வாலிபரிடம் விசாரணை
x
தினத்தந்தி 10 April 2019 10:30 PM GMT (Updated: 10 April 2019 7:50 PM GMT)

தாம்பரம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் வாலிபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தாம்பரம்,

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பட்டுவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருடைய மகள் அகிலா (வயது 20). இவர், சென்னையை அடுத்த தாம்பரம், இரும்புலியூரில் தனது தோழியுடன் அறை எடுத்து தங்கி, பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆய்வகத்தில் வேலை செய்து வந்தார்.

இவருடைய அக்காள் அருள்மொழி, தனது கணவர் சதீஷ் மற்றும் மைத்துனர் சந்தோஷ் (28) ஆகியோருடன் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், காந்தி தெருவில் வசித்து வருகிறார். தனியார் கார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வரும் சந்தோசுக்கும், அகிலாவுக்கும் சிறுவயதில் இருந்தே நட்பு உள்ளதாகவும், ஆனால் தற்போது இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சதீஷ் தனது மனைவி அருள்மொழியுடன் கடந்த சிலநாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு அகிலாவை செல்போனில் தொடர்பு கொண்ட சந்தோஷ், தனியாக பேச வேண்டும் என சிட்லபாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.

அதன்படி அங்கு சென்ற அகிலா, மாடிப்படி ஏறும்போது கிரில் கேட்டில் இடித்ததில் அவரது நெற்றியில் ரத்தக்காயம் ஏற்பட்டது. துணியால் துடைத்து கொண்டு இருவரும் வீட்டுக்குள் சென்று தூங்கி விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் எழுந்த சந்தோஷ், அகிலாவை எழுப்பியபோது அவர் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அகிலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ், தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அகிலாவின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அகிலா சாவுக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story