ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய கூரல் மீன்கள் ரூ.1 கோடிக்கு ஏலம் போனது


ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய கூரல் மீன்கள் ரூ.1 கோடிக்கு ஏலம் போனது
x
தினத்தந்தி 12 April 2019 4:15 AM IST (Updated: 12 April 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் வலையில் அதிக அளவில் கூரல் மீன்கள் சிக்கின. இந்த மீன்கள் ரூ.1 கோடிக்கு மேல் ஏலம் போனது.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வழக்கம் போல் மீன்பிடித்து விட்டு நேற்று காலை மீனவர்கள் கரைக்கு திரும்பினர். அப்போது மீனவர்கள் பலரின் வலையில் கூரல் மீன்கள் அதிகமாக சிக்கி இருந்ததை கண்டு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் மீனவர்கள் வலையில் கூரல் மீன்கள் சிக்கிய விபரம் வியாபாரிகளுக்கு தெரியவந்தது. இதனால் காலையில் இருந்தே கூரல் மீன்களை வாங்க ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் வியாபாரிகள் குவிந்தனர். இதையடுத்து பிடித்த சுமார் 300-க்கும் மேற்பட்ட கூரல் மீன்கள் ஏலம் விடப்பட்டது. வியாபாரிகள் பலர் ஏலத்தில் பங்கேற்று போட்டிபோட்டு மீன்களை விலைக்கு வாங்கினர். இந்த கூரல் மீன்கள் மொத்தம் ரூ.1 கோடிக்கு ஏலம் போனது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உணவுக்கு பயன்படுத்துவதில்லை

அப்படி ஏன் இந்த மீன்கள் இவ்வளவு விலை போக காரணம் என்ன என்று அனைவரின் மனதிலும் கேள்வி எழும்பலாம். இந்த மீனை பொதுவாக உணவுக்காக யாரும் பயன்படுத்துவதில்லை. இந்த மீனின் வயிற்றில் ஒரு வகையான குடல் போன்ற உறுப்பு காணப்படும்.

அதனை நெட்டி என்று அழைப்பார்கள். இந்த நெட்டியானது மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிக்கு தையல் போட பயன்படுத்தப்படும் நூல் இந்த நெட்டியில் இருந்து தான் தயாரிக்கப் படுகிறது என்று கூறப்படுகிறது. இதனாலேயே இந்த மீன்கள் அதிக விலை போகிறது என்று மீனவ மக்கள் தெரிவித்தனர். 

Next Story