40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்: தேர்தலுக்கு பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கும் மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்


40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்: தேர்தலுக்கு பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கும் மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்
x
தினத்தந்தி 15 April 2019 4:45 AM IST (Updated: 15 April 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், தேர்தலுக்கு பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

சேலம், 

சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

மத்தியில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளோம். மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு சேலம் மாவட்டம் எப்போதும் கோட்டையாக திகழும். அதேபோல் தற்போது அ.தி.மு.க.வுடன் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் இணைந்திருப்பதால் சேலம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனுக்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நீங்கள் தேடி தரவேண்டும்.

நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அ.தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டம் நிறைவேற்றப்பட்டது? என்று கேள்வி கேட்டுள்ளார். நான் கேட்கிறேன், நீங்கள் சேலம் வழியாகத்தான் வந்திருப்பீர்கள். சேலத்தில் எவ்வளவு மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலங்களே நாங்கள் செய்த சாதனைக்கு சாட்சியாக திகழ்கிறது.

சேலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்துவற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெய லலிதாவிடம் அப்போது கோரிக்கை வைத்தோம். அதன்பிறகு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சில இடங்களில் நடைபெறும் மேம்பால பணிகள் விரைவில் நிறைவு பெற உள்ளது. மேலும், தனி குடிநீர் திட்டம் மூலம் சேலம் மாநகர மக்களுக்கு தங்குதடையின்றி பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, நங்கவள்ளி - மேச்சேரி குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தங்குதடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சேலத்தில் ரூ.900 கோடியில் நவீன முறையில் பஸ்போர்ட் விரைவில் அமைக்கப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 ஆண்டுகளில் சேலம் நவீன மாநகரமாக உருவாகும். ஓமலூர்-மேச்சேரி, பவானி-மேட்டூர் ஆகிய சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது.

தி.மு.க. ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அத்திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு புதிய கட்டிடம், சேலம் மாநகரில் 16 பூங்காக்கள், சேலம், காடையாம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையத்தில் புதிய தாலுகா அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இரும்பாலையில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் ஆரம்பிக்கப்படஉள்ளது. இதன்மூலம் நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேட்டூர் உபரிநீரை கொண்டு வந்து மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி விவசாயம் செழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைவாசலில் ரூ.900 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் ரூ.1,000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும். பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் ரூ.1000 வழங்கப்பட்டது. அதேபோல், தேர்தல் முடிந்தவுடன் ஏழை தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வாழப்பாடி மற்றும் கருமந்துறையில் புதிய காவல் நிலைய கட்டிடம், வாழப்பாடியில் புதிய நீதிமன்றம் என நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாங்கள் செய்த சாதனைகளை கூற வேண்டும் என்றால் ஒருநாள் போதாது.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். அதாவது, பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு திட்டம் கூறப்பட்டுள்ளது. இதனால் மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்த வுடன் முதல் வேலையாக கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம். இதன்மூலம் நமது பகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நீங்கி நாடு செழிக்கும். 83 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த மேட்டூர் அணை தூர்வாரப்பட்டுள்ளது. இப்படி மக்களுக்கு தேவையான திட்டங் களாக பார்த்து நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

இந்த தேர்தலோடு எனது அரசியல் வாழ்க்கை கிழியும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருக் கிறார். நான் கூறுகிறேன். முதல்-அமைச்சர் பதவி நாற்காலியில் மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் அமரமுடியாது. இந்த தேர்தலுக்கு பிறகு தான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை தொடங்கும். ஆகவே நீங்கள் கண்ட கனவு ஒருபோதும் பலிக்காது. ஏற்கனவே கண்ட கனவு எல்லாம் கானல் நீராகிவிட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் நினைத்தார். ஆனால் அது எதுவும் நடைபெறவில்லை. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும். நாளை நமதே, நாற்பதும் நமதே. நாடாளுமன்ற தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. அதிலும் நமது கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவோடு அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

இதுதவிர, மேலும் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி நடைபெறும் அந்த 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தமிழகம் முழுவதும் இதுவரை 37 நாடாளுமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து பேசியிருக்கிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆரவாரத்துடன், மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்ததை பார்க்க முடிகிறது.

மத்திய அரசு சாலை மேம்பாட்டிற்காக தமிழகத்துக்கு ரூ.2,500 கோடி வழங்கி உள்ளது. தமிழகத்தில் 39 மாநில சாலைகள், தேசிய நெடுஞ் சாலைகளாக தரம் உயர்த்த மத்திய மந்திரி நிதின் கட்காரி நடவடிக்கை எடுத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் நான் நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறேன். சேலம் முதல்-அமைச்சரை பெற்ற மாவட்டம் ஆகும்.

நான் இங்கு முதல்-அமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாக இருந்து பேசு கிறேன். நீங்கள் தந்த பதவி முதல்-அமைச்சர் பதவி. சேலம் மாவட்டத்தில் நிலவும் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்றால் வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாஜலம், செம்மலை, சக்திவேல், சின்னதம்பி, மனோன்மணி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் அருள், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் பங்க் வெங்கடாசலம், அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான் கென்னடி, முன்னாள் கவுன்சிலர் கிருபாகரன், பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கோபிநாத், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், த.மா.கா. மாநில செயலாளர் வக்கீல் செல்வம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story