நாளை மறுநாள் வாக்குப்பதிவு: வாக்குச்சாவடிகளுக்கான பொருட்கள் தயார்


நாளை மறுநாள் வாக்குப்பதிவு: வாக்குச்சாவடிகளுக்கான பொருட்கள் தயார்
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 8:52 PM GMT)

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடிகளுக்கான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆங்காங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர்கள் பயன்படுத்தக்கூடிய பேனா, பென்சில், மை, கவர்கள் உள்ளிட்ட 106 வகையான பொருட்கள் தாசில்தார் அலுவலகங்களுக்கும், உதவி தேர்தல் அதிகாரி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை மொத்தமாக ஒரு பையில் போட்டு அதனை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை தனித்தனியாக பைகளில் போட்டு வைத்தனர். இந்த பணிகள் தாசில்தார் ராஜவேல் தலைமையில் நடந்தது.

இதேபோல மற்ற சட்டமன்ற தொகுதிகளிலும் 106 பொருட்களை பைகளில் தனித்தனியாக வைத்தனர். நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் போது, இந்த பொருட்களும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதில் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.

இதற்கிடையில் அரசியல் கட்சி வேட்பாளர்களின் சூறாவளி பிரசாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 177 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு ஊழியர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெப் கேமரா பொருத்தப்பட்டும், துணை ராணுவ படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டும் கண்காணிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நுண் பார்வையாளர்களுக்கான பணிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் அமித்குமார் விளக்கி கூறினார். மேலும் பணிகளை துல்லியமாக கண்காணித்து வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் நுண் பார்வையாளர்களான தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story