தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.2 கோடி பறிமுதல் திருவள்ளூர் கலெக்டர் தகவல்


தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.2 கோடி பறிமுதல் திருவள்ளூர் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 April 2019 10:15 PM GMT (Updated: 16 April 2019 7:11 PM GMT)

தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.2¼ கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 3,603 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 166 மிதமான பதற்றம் உள்ள வாக்குச்சாவடிகளும், பதற்றம் ஏற்படக்கூடிய பகுதிகள் 9 வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

செலவின கண்காணிப்பு குழுக்களில் 90 பறக்கும் படை கண்காணிப்பு குழுக்களும், 30 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 11 ஒளிப்பதிவுகளை பார்க்கும் குழுக்களும், 11 ஒளிப்பதிவு கண்காணிப்பு குழுக்களும், 11 கணக்கீட்டு குழுக்களும், 11 உதவி செலவின பார்வையாளர்கள் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் 27 சோதனை சாவடிகள், 2 சுங்கச்சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் சோதனையிட்டதில் ரூ.2 கோடியே 32 லட்சத்து 61 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பண்டல்களும், 73 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக பல்வேறு கட்சியினர் மீது இதுவரை மொத்தம் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து தேர்வு சம்பந்தமாக 671 புகார்கள் பெறப்பட்டு அவற்றில் 595 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அடைய வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு பொருட்களை கொண்டு செல்லும் 287 வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

Next Story