வாக்களிக்க கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்; கலெக்டர் அறிவிப்பு
வாக்களர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க செல்லும் போது, கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் குறித்து கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில் ஆண்கள் 7 லட்சத்து 65 ஆயிரத்து 811 பேர்களும், பெண்கள் 7 லட்சத்து 84 ஆயிரத்து 513 பேர்களும் மற்றவர்கள் 66 ஆகியோர் என மொத்தம் 15 லட்சத்து 50 ஆயிரத்து 390 வாக்காளர்கள் உள்ளனர். இந்த 6 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 177 வாக்குசாவடிகள் உள்ளன.
அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவிற்கான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும் மாவட்டத்தில் 122 வாக்குப்பதிவு மையங்களும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதியில் 43 வாக்குப்பதிவு மையங்களும் என மொத்தம் 165 மையங்கள் பதற்றமானவை என காவல்துறையால் கண்டறியப்பட்டுள்ளன.
அந்த மையங்களுக்கு ஒரு நுண்பார்வையாளர் மற்றும் துணை மத்திய பாதுகாப்புப்படை வீரர் ஒருவரும் கூடுதலாக பணியை மேற்கொள்வார்கள். இவற்றுடன் ஒவ்வொரு மையத்திலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். அதேபோல மாவட்டத்தில் 470 வாக்குப்பதிவு மையங்களுக்கு வெப் கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 10 ஆயிரத்து 873 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்காளர்கள் வாக்களிக்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அடையாள ஆவணங்களான வாக்காளர்அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் வரையறுக்கப்பட்ட பொது நிறுவன பணியாளர் அடையாள அட்டை, வங்கி, தபால் கணக்கு புத்தகங்கள், வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டை, ஸ்மார்ட் கார்டு, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஓய்வூதிய ஆவணம், ஆதார் அட்டை ஆகியவைகளில் மேற்கண்ட ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு மையம் வரை வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதுமட்டுமன்றி மாற்றுத்திறனாளிக்கு உதவியாக செல்லும் உதவியாளர் அனுமதிக்கப்படுவதுடன், அவர்கள் உடனடியாக வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டதுடன் போதிய அளவு குடிநீர் வசதியும் அமைத்துக் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க ஏதுவாக போலீசார் 5 கட்ட பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்கின்றனர். வாக்குப்பதிவிற்கான அனைத்துப் பணிகளும் தயார் நிலையில் உள்ளன. எனவே வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு கொடுத்து நாடாளுமன்றம், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலை சிறப்பாக நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்