திண்டுக்கல்லில் கலெக்டர் திடீர் ஆய்வு பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
திண்டுக்கல்லில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் டி.ஜி.வினய் திடீர் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இதற் காக வாக்குச்சாவடி வாரியாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதேநேரம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டன.
இதுதவிர ஒரே வேட்பாளருக்கு 90 சதவீதம் வாக்குப்பதிவான 7 வாக்குச்சாவடிகள் சர்ச்சைக்குரியவையாக கணக்கிடப்பட்டு இருக் கின்றன. இந்த 144 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. இதற் காக அந்த பகுதிகளில் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் உதவி தேர்தல் அலுவலர், மண்டல அலுவலர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான டி.ஜி.வினய் பதற்றமான வாக்குச்சாவடிகளை திடீர் ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி நேற்று திண்டுக் கல் மேற்குரதவீதி, முகமதியார்புரம், பூச்சிநாயக்கன்பட்டி, சவேரியார்பாளையம், ஒய்.எம்.ஆர்.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அந்த வாக்குச்சாவடிகளில் செய்யப்பட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் வாக்காளர்கள் எளிதாகவும், அச்சமின்றியும் வாக்களிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story