நாமக்கல்-திருச்சி இடையே ரூ.2 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படும் - தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் தங்கமணி தகவல்


நாமக்கல்-திருச்சி இடையே ரூ.2 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படும் - தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் தங்கமணி தகவல்
x
தினத்தந்தி 17 April 2019 4:00 AM IST (Updated: 17 April 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்-திருச்சி இடையே சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படும் என நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் காளியப்பன் போட்டியிடுகிறார். இவர் நேற்று நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு, வார்டாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். இதையொட்டி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரும் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இறுதியாக நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திற்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவுக்கு வலிமையான தலைவர் வேண்டும். நாட்டுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடிக்கு நாங்கள் ஓட்டு கேட்கிறோம். ஆனால், எதிர் அணியினர் யார் பிரதமர் என சொல்லாமல் தேர்தலை சந்திக்கின்றனர். எதிர் கூட்டணியில், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், மாயாவதி, சந்திரபாபுநாயுடு, சந்திரசேகரராவ் உள்பட 10 பேர் பிரதமர் வேட்பாளர்களாக உள்ளனர்.

தேர்தல் முடிந்தபிறகு நாமக்கல் மற்றும் திருச்சி இடையே சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதேபோல் நாமக்கல்லில் இருந்து ராசிபுரம் வழியாக சேலம் செல்லும் சாலை, திருச்செங்கோடு-ஓமலூர் இடையேயான சாலை, திருச்செங்கோடு-ஈரோடு இடையேயான சாலையும் 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. 2, 3 மாதங்களில் இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. மேலும் மோகனூர் காவிரி ஆற்றில் ரூ.400 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஒன்றும் அடுத்த ஆண்டு தொடங்க நடவடிக்கை எடுப்போம்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரிக்கும், துரோகிக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., வேட்பாளர் காளியப்பன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் விஜயன், த.மா.கா. கிழக்கு மாவட்ட தலைவர் கோஸ்டல் இளங்கோ, நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து பரமத்திவேலூர் தாலுகா வெங்கரையில் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க இலக்கிய அணி செயலாளர் விஜய குமார் தலைமை தாங்கினார். இதில் வெங்கரை பேரூர் அ.தி.மு.க. செயலாளர் ரவீந்திரன், வெங்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் நித்திய குமாரி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story