இன்று வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் மின்னணு எந்திரங்கள் அனுப்பும்பணி


இன்று வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் மின்னணு எந்திரங்கள் அனுப்பும்பணி
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 4:42 PM GMT)

ஆரணி தாலுகா அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் மின்னணு எந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆரணி,

தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரி தொகுதிக்கும் இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு எந்த அலுவலர் என்பது குறித்த நியமனம் நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினமே வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரம் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டன. அத்துடன் வாக்குச்சாவடிக்கு தேவையான 80 வகையான தேர்தல் பொருட்களும் பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக கோணிப்பையில் கட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆரணி தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள், தேர்தல் பொருட்கள் ஆகியவை தாலுகா அலுவலகத்திலிருந்து அனுப்பும் பணி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் இல.மைதிலி தலைமையில் நடந்தது. இதனையொட்டி தாலுகா அலுவலகத்தில் வலம்புரி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

பின்னர் அவை வாக்குச்சாவடி மையங்களுக்கு 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதற்குண்டான அலுவலர்கள், உதவியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள், முன்னாள் ராணுவ வீரர்களுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது.

நிகழ்ச்சியில் தாசில்தார் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்மணி, வட்ட வழங்கல் அலுவலர் மணி, மண்டல துணை தாசில்தார்கள் சத்தியன், ரவிச்சந்திரன், தட்சிணாமூர்த்தி, தேர்தல் உதவி தாசில்தார் திருநாவுக்கரசு உள்பட வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story