நாடாளுமன்ற தேர்தல், நீலகிரியில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயார்


நாடாளுமன்ற தேர்தல், நீலகிரியில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயார்
x
தினத்தந்தி 17 April 2019 10:15 PM GMT (Updated: 17 April 2019 5:55 PM GMT)

நீலகிரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

ஊட்டி,

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 239 வாக்குச்சாவடிகள், கூடலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 221 வாக்குச்சாவடிகள், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 223 வாக்குச்சாவடிகள், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 321 வாக்குச்சாவடிகள், அவினாசி(தனி) சட்டமன்ற தொகுதியில் 312 வாக்குச்சாவடிகள், பவானிசாகர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் என மொத்தம் ஆயிரத்து 610 வாக்குச்சாவடிகள் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான வி.வி.பேட் எந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்களை அனுப்பி வைக்கும் பணி நேற்று அந்தந்த தொகுதிகளில் நடைபெற்றது. ஊட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான எந்திரங்கள் ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

புகைப்படத்துடன் கூடிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பணியை நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தேர்தல் செலவின பார்வையாளர் கிப்கென் ஆகியோர் பார்வையிட்டனர். ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 31 மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்களிடம் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் சரிபார்த்து கொடுக்கப்பட்டன.

இதனை பெற்றுக்கொண்ட குழுவினர் ஊட்டியில் பெய்த மழையும் பொருட்படுத்தாமல், கொட்டும் மழையில் வாகனங்களை ஏற்றி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட வாகனங்களில் இந்திய துணை ராணுவத்தினரும் சென்றனர். அவர்கள் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 888 வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 826 வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள், கூடலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 823 வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 537 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் பெண்கள் மட்டுமே பணிபுரியும் 3 மகளிர் வாக்குச்சாவடிகள் உள்ளன. அவை ஊட்டி சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, மஞ்சூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகும். போக்குவரத்து வசதி குறைவாகவும், தொலைதூரத்திலும் என நீலகிரியில் 27 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 10 வாக்குச்சாவடிகள், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகள், கூடலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 15 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வந்து வாக்களிக்கும் வகையில், போக்குவரத்து வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

வனப்பகுதிகளையொட்டி கிராமங்களில் வசித்து வரும் ஆதிவாசிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாக்களிக்கும் பொருட்டு, வனத்துறை மூலம் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகமான வாக்குகள் கொண்ட வாக்குச்சாவடி கூடலூரில் உள்ள ஹெல்த்கேம்ப் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஆகும். இங்கு ஆயிரத்து 440 வாக்குகள் உள்ளன. மிகவும் குறைவான வாக்குகள் கொண்ட வாக்குச்சாவடி மசினகுடி அருகே உள்ள சொக்கநள்ளி. இதில் 115 வாக்குகளே உள்ளது. வெகுதொலைவில் அப்பர்பவானி மற்றும் தெங்குமரஹாடாவில் 2 வாக்குச்சாவடிகள் உள்ளன. தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பெண்கள் பணிபுரிய அனுப்பப்படுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story