கர்நாடகத்தில் 14 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது


கர்நாடகத்தில் 14 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது
x
தினத்தந்தி 17 April 2019 11:00 PM GMT (Updated: 17 April 2019 6:25 PM GMT)

கர்நாடகத்தில் 14 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

இருகட்ட தேர்தல்

இதில் தலா 14 தொகுதிகள் வீதம் 2 கட்டங்களாக ஏப்ரல் 18-ந்தேதி (அதாவது இன்று), 23-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பெங்களூரு தெற்கு, மத்திய பெங்களூரு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, ஹாசன், மைசூரு-குடகு, உடுப்பி-சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, மண்டியா ஆகிய 14 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதில் மொத்தம் 241 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா

இதில் முக்கியமாக துமகூரு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவும், மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும், அவரை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா அம்பரீசும், ஹாசனில் தேவேகவுடாவின் பேரனும், பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணாவும் போட்டியிடுகிறார்கள்.

அதுபோல் பெங்களூரு வடக்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, காங்கிரஸ் சார்பில் கிருஷ்ண பைரேகவுடா, கோலார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா, சிக்பள்ளாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி, அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி பச்சே கவுடா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

இதையொட்டி பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 14 தொகுதிகளிலும் 30 ஆயிரத்து 164 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் உடுப்பி-சிக்கமகளூரு தொகுதியில் 1,837 வாக்குச்சாவடிகளும், ஹாசனில் 2,235-ம், தட்சிணகன்னடாவில் 1,861-ம், சித்ரதுர்காவில் 2,161-ம், துமகூருவில் 1,907-ம், மண்டியாவில் 2,046-ம், மைசூரு-குடகில் 2,187-ம், சாம்ராஜ்நகரில் 2,005-ம், பெங்களூரு புறநகரில் 2,672-ம், பெங்களூரு வடக்கில் 2,656-ம், மத்திய பெங்களூருவில் 2,082-ம், பெங்களூரு தெற்கில் 2,131-ம், சிக்பள்ளாப்பூரில் 2,284-ம், கோலாரில் 2,100 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் மொத்தமாக 6 ஆயிரத்து 12 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும்.

மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 5 கோடியே 10 லட்சத்து 59 ஆயிரத்து 103 வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் சுமார் 2 கோடியே 67 லட்சத்து 51 ஆயிரத்து 893 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இதில் ஆண் வாக்காளர்கள், 1 கோடியே 35 லட்சத்து 45 ஆயிரத்து 818 பேரும், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 32 லட்சத்து 3 ஆயிரத்து 258 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 2,817 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

11 ஆவணங்கள்

தேர்தல் பணியில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 405 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். பண வினியோகத்தை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் சுமார் 3,500 நுண் பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, 24 மணிநேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், ஓட்டுனர் உரிமம், அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டை, தபால் அலுவலகம், வங்கி கணக்கு புத்தகங்கள், மத்திய-மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டை, பான்கார்டு, கிராமப்புற வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, தொழிலாளர் நலத்துறையில் வழங்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை, நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதியம் பெறுவோரின் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகிய 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டுப்போட முடியும்.

இணையதள கேமரா

அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனால் வாக்காளர்கள் அனைவரும் முன்கூட்டியே, வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மொத்தம் உள்ள 6,012 பதற்றமான வாக்குச்சாவடிகளில் 1,666 வாக்குச்சாவடிகளில் இணையதள கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 2,306 வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமராக்களில் படம் பிடிக்கப்படுகிறது.

நுண் பார்வையாளர்கள்

மேலும் 990 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. மதுபான கடைகள் இன்று மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் தேர்தலில் கார்கள், பஸ்கள் உள்பட 21 ஆயிரத்து 600 வாகனங்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன.

சஞ்சீவ்குமார் பேட்டி

இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இன்று முதல்கட்ட தோ்தல் 14 தொகுதிகளில் நடக்கிறது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன வசதியும் செய்துள்ளோம்.

முதலுதவி சிகிச்சை

அதனால் வாக்காளர்கள் வாக்களிக்கும் தங்களின் கடமையை பயம் இல்லாமல் வந்து ஆற்ற வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும். வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.

அதனால் இந்த முறை வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வாக்குச்சாவடிகளில் முதலுதவி சிகிச்சை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்கப்படும். ஆன்லைன் மூலமாக வாக்களிக்கும் வசதி இல்லை.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.

பெங்களூரு உள்பட 14 தொகுதிகளில் இருந்தும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் நேற்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான தளவாட பொருட்களுடன் புறப்பட்டு சென்றனர்.

40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

இதையொட்டி 14 தொகுதிகளிலும் மத்திய பாதுகாப்பு படையினர், கர்நாடக ஆயுதப்படையினர், போலீசார் என 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் வாக்குச்சாவடிகளை சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story