தேர்தல் பணிக்கு வந்த போலீஸ்காரர் தவறவிட்டார்: இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் கிடந்த துப்பாக்கி குண்டு தகவல் தெரிவிக்க போலீசார் மறுப்பு
வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் தவறவிட்ட துப்பாக்கி குண்டு இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நேற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு அங்கிருந்து உப்பளம், உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் விளையாட்டு மைதான வளாகத்தில் துப்பாக்கி குண்டு ஒன்று கிடந்தது. இதை மைதானத்துக்கு வந்த ஒருவர் எடுத்து அங்கு இருந்த போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனிடம் கொடுத்தார்.
அந்த குண்டு போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கியில் உள்ளது என்பதால் அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவரை அழைத்து துப்பாக்கியில் உள்ள குண்டுகளை சரிபார்க்குமாறு கண்டித்தார். இதைத்தொடர்ந்து அந்த போலீஸ்காரர் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை எண்ணிப்பார்த்து அதில் குண்டுகள் குறைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மைதானத்தில் கிடந்த குண்டு தனது துப்பாக்கியில் இருந்ததுதான் என்று அவர் அந்த குண்டை வாங்கிக்கொண்டார். அவர் வைத்திருந்த குண்டுகள் மேலும் சில காணாமல் போயிருப்பதாக தெரிகிறது. அதை சிறிதுநேரம் அந்த போலீஸ்காரர் தேடிப்பார்த்தார். ஆனால் எத்தனை குண்டுகள் தொலைந்தன. அனைத்தும் கிடைத்துவிட்டதா? என்பது குறித்த தகவல் எதையும் போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
வாக்குப்பதிவு எந்திரங்களின் காவலுக்கு வந்த போலீஸ்காரர் துப்பாக்கி குண்டுகளை தொலைத்த சம்பவம் புதுவை போலீசார் இடையே பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story