கோவை மாவட்டத்தில் 3,070 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள் தயார் - பதற்றமானவற்றில் வெப்கேமரா பொருத்தி கண்காணிப்பு


கோவை மாவட்டத்தில் 3,070 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள் தயார் - பதற்றமானவற்றில் வெப்கேமரா பொருத்தி கண்காணிப்பு
x
தினத்தந்தி 18 April 2019 4:15 AM IST (Updated: 18 April 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் 3,070 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பதற்றம் நிறைந்த 470 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோவை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவை நாடாளுமன்ற தொகுதியில் 9 லட்சத்து 65 ஆயிரத்து 120 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 66 ஆயிரத்து 239 பெண் வாக்காளர்களும், 199 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 19 லட்சத்து 31 ஆயிரத்து 558 பேர் ஓட்டுப்போட உள்ளனர்.

இதேபோன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 36 ஆயிரத்து 632 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 63 ஆயிரத்து 777 பெண் வாக்காளர்களும், 160 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 15 லட்சத்து 569 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 106 பொருட்கள் தாலுகா அலுவலகங்களில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் ரகசிய இடத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று காலை சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட பொருட்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரி மற்றும் வேன்களில் போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையின் உதவியுடன் சட்டமன்ற தொகுதி வாரியாக அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று காலையில் பணி ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து தயார்நிலையில் வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்று தயார்நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் தங்களின் வீடு வாக்குச்சாவடி அருகே இருந்தாலும் வீட்டிற்கு செல்லக்கூடாது. இரவு முழுவதும் வாக்குச்சாவடியில் இருக்க வேண்டும். அதிகாலை 4 மணியளவில் எழுந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தயார் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் மாதிரி வாக்குப்பதிவை முடிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. கோவை மாவட்டம் முழுவதும் 470 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டு உள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கேமராவில் வைபை வசதி உள்ளது. எனவே அதனை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கின்றனர். இதுதவிர பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு, தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக கோவை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை அனுப்பும் பணியை கலெக்டர் ராஜாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தேர்தல் பணியில் ஈடுபட்ட வர்களில் ஒருசிலர் வரவில்லை என்றால் அவர்களுக்கு மாற்று பணியாளர்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் கள் ஒதுக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நேற்று காலை நியூசித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு வந்து காத்து இருந்தனர். பின்னர் அவர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத் தில் தங்க வைக்கப்பட்டு எப்போதும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் ஒருசில வாக்குச்சாவடிகளின் வெளியே சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் வாக்காளர்களின் வசதிக்காக குடிநீர், மின்விசிறி, கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.) பாதுகாப்பாக வைக்கப்படும். இதற்காக அங்கு 3 அடுக்கு போலீஸ் மற்றும் துணை ராணுவபடை பாதுகாப்பு போடப்பட உள்ளது.

மேலும் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளது. அத்துடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் ஜன்னல்களை திறக்க முடியாத வகையில் மரப்பலகையால் மறைத்து சீல் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு இரவு நேரத்தில் அத்துமீறி உள்ளே நுழைபவர்களை கண்டுபிடிக்கும் வகையில் கல்லூரி வளாகம் மற்றும் மைதானத்தில் 300-க்கும் மேற்பட்ட அதிக ஒளி தரும் விளக்குகள் கம்பங்களில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

Next Story