தேர்தல் நேரத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்துவது அதிகார துஷ்பிரயோகம் ஓட்டுப்போட்டுவிட்டு வந்த துரைமுருகன் பேட்டி
‘தேர்தல் நேரத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்துவது அதிகார துஷ்பிரயோகம்’ என்று காட்பாடியில் ஓட்டுப்போட்டுவிட்டு வந்த தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
காட்பாடி,
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடியில் உள்ள டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், அவருடைய மனைவி சாந்தக்குமாரி, மகனும், வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளருமான கதிர்ஆனந்த், மருமகள் சங்கீதா ஆகியோருடன் சென்று வாக்களித்தார்.
பின்னர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் வருமானவரி சோதனை நடத்துவது அதிகார துஷ்பிரயோகமாகும். இந்தியாவில் காபந்து அரசு இருக்கின்றபோது நடுநிலையோடு செயல்படக்கூடிய சி.பி.ஐ., வருமானவரித்துறையை பிரதமர் மற்றும் அவருக்கு கீழ் இருப்பவர்கள் இயக்கக்கூடாது. இதுவரை தேர்தல் நேரங்களில் எதிர்க்கட்சிகள் மீது வருமானவரித்துறையை கட்டவிழ்த்துவிட்டு வேட்டையாடியது கிடையாது. இந்தியாவில் இதுதான் முதல் முறை.
நிர்வாகம், நீதிமன்றம், சட்டமன்றம் தனியாக இயங்கவேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கம். தன்னிச்சையாக செயல்படக்கூடிய இவைகளை ஆளும்கட்சியினர் கையில் எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்குவது என்பது சர்வாதிகார போக்குக்கு மூலகாரணமாக அமைந்துவிடும் என்பது எனது கருத்து. இந்த போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.
வாக்குப்பதிவு சமயத்தில்கூட ஒருபக்கம் வருமானவரி சோதனை நடைபெறுகிறது. இதனால் இது ஜனநாயக நாடா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story