நாமக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குகளை அழிக்காததால் குழப்பம் 21 வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க ஏற்பாடு


நாமக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குகளை அழிக்காததால் குழப்பம் 21 வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 18 April 2019 10:00 PM GMT (Updated: 18 April 2019 7:46 PM GMT)

நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அனைத்து மகளிர் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குகளை அழிக்காததால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து 21 வாக்காளர்களுக்கு மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

நாமக்கல், 

தேர்தல் ஆணைய உத்தரவின்படி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 6 வாக்குச்சாவடிகள் அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகளாக ஏற்படுத்தப்பட்டு இருந்தன. அதன்படி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் அனைத்து மகளிர் வாக்குச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டது. இதில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தமிழ்மணி தலைமையில் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதைதொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 7.30 மணியளவில் 21 வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து இருந்தனர். ஆனால் 71 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்து உள்ளதாக எந்திரத்தில் தவறான தகவல் வெளியானது. இதை கண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜகோபால், தாசில்தார் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் மாதிரி வாக்குப்பதிவின்போது எந்திரத்தில் பதிவாகி இருந்த வாக்குகளை அழிக்காமல், வாக்குப்பதிவை தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக ஏற்கனவே மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவாகி இருந்த வாக்குகளின் எண்ணிக்கையும், வாக்குப்பதிவு தொடங்கிய பிறகு பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் சேர்ந்து வாக்குப்பதிவு எந்திரத்தில் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த எந்திரத்தில் பதிவாகி இருந்த வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, காலை 8 மணியளவில் அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் மீண்டும் வாக்குப்பதிவு நடந்தது. அத்துடன் ஏற்கனவே வாக்களித்து இருந்த 21 வாக்காளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு மீண்டும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த 21 வாக்காளர்களும் மீண்டும் அனைத்து மகளிர் வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் பிற வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை அந்த வாக்குச்சாவடியில் பதிவு செய்தனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story