பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 78.70 சதவீதம் வாக்குகள் பதிவானது


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 78.70 சதவீதம் வாக்குகள் பதிவானது
x
தினத்தந்தி 18 April 2019 11:00 PM GMT (Updated: 18 April 2019 7:54 PM GMT)

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 78.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

பெரம்பலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரம்பலூர் (தனி), திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (தனி), முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியலின்படி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 13,91,011 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 6,78,452, பெண் வாக்காளர்கள் 7,12,477, 82 திருநங்கை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். பெரம்பலூர் தொகுதியில் உள்ள 1,644 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. இதில் 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் இருந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்புடன்

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.70 சதவீதம் வாக்குகள் பதிவானது. மொத்தம் 10,94,659 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

இதில் 5,24,454 ஆண் வாக்காளர்களும், 5,70,177 பெண் வாக்காளர்களும், 28 திருநங்கை வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டுபாட்டு கருவிகளை சீல் வைத்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரமான வி.வி.பேட் எந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பெரம்பலூர், துறையூர், லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரம், கட்டுபாட்டு கருவிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு வைத்து தான் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பதிவான வாக்குகள் விவரம்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:-

பெரம்பலூர் (தனி) 77.77

குளித்தலை 85.77

லால்குடி 79.07

மண்ணச்சநல்லூர் 77.83

முசிறி 76.15

துறையூர் (தனி) 76.07 ஆகும்.

Next Story