பொள்ளாச்சியில் கனமழை, மின்தடை, வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி பாதிப்பு


பொள்ளாச்சியில் கனமழை, மின்தடை, வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 18 April 2019 11:00 PM GMT (Updated: 18 April 2019 9:43 PM GMT)

பொள்ளாச்சியில் கனமழை, மின்தடை காரணமாக வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி பாதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் கூட்டமாக நிற்க கூடாது. கட்சி வேட்டிகள் கட்ட கூடாது. வேட்பாளர் புகைப்படம் மற்றும் சின்னங்கள் சட்டை பாக்கெட்டில் வைக்க கூடாது என்பது உள்ளிட்ட விதிகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. ஆனால் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.வை சேர்ந்த பெண் ஒருவர் வரிசையில் நிற்கும் பெண்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதை பார்த்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், பிரசாரம் செய்ய கூடாது என்று மட்டும் அறிவுறுத்தினார்.

இதனால் அதே வாக்குச்சாவடியில் தி.மு.க. பிரமுகர் ஒருவர் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போடுமாறு வாக்காளர்களிடம் கூறினார். இதனால் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதனப்படுத்தினர். ஆச்சிப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்காளர்களை வரிசையாக விடாததால், பலர் வாக்குச்சாவடிக்கு உள்ளேயே நின்றனர்.

கிணத்துக்கடவு ஒன்றியம் மெட்டுவாவி ஊராட்சியில் வாக்குச்சாவடி எண் 8ல் மாலை 5 மணியளவில் திடீரென்று வி.வி.பேட் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதில் வாக்காளர்கள் வாக்களிக்கும் சின்னத்தை காட்டாமல் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சியில் இருந்து மாற்று எந்திரம் கொண்டு வரப்பட்டு சுமார் 45 நிமிடங்கள் கழித்து ஓட்டுப்பதிவு தொடங்கியது.

இதனால் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்தனர். பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் செம்பாகவுண்டர்காலனியில் உள்ள வாக்குச்சாவடியில் இருந்த பூத் ஏஜெண்ட் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு பிறகு வாக்காளர்கள் யாரும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட வில்லை. மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டனர். அவர் களை மட்டும் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதித்தனர்.

இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் திடீரென்று மின்தடை ஏற்பட்டது. இதனால் வாக்குச்சாவடிகளில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. போதிய வெளிச்சம் இல்லாததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் சிரமத்துக்கு ஆளானார்கள்.

மின்தடை காரணமாக வாக்குப்பதிவு முடிந்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப் பட்டன. மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் வெளிச்சத்தில் தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சியினரின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் எந்திரங்களுக்கு சீல் வைத்தனர். இதையடுத்து அந்த எந்திரங்களை லாரிகளில் ஏற்றி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லும் பணியும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் தேர்தல் அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு லாரிகளில் ஏற்றி கொண்டு சென்றனர்.

Next Story