வேப்பூர் அருகே, மருத்துவக்கழிவு ஆலை அமைக்க எதிர்ப்பு, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்


வேப்பூர் அருகே, மருத்துவக்கழிவு ஆலை அமைக்க எதிர்ப்பு, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 18 April 2019 11:00 PM GMT (Updated: 18 April 2019 10:23 PM GMT)

வேப்பூர் அருகே மருத்துவக்கழிவு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து வாக்களிக்க வருமாறு வீடு, வீடாக சென்று அதிகாரிகள் அழைத்தனர்.

வேப்பூர், 

வேப்பூர் அருகே உள்ள தே.புடையூர் ஊராட்சியில் மருத்துவக்கழிவு ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இங்கு ஆலை அமைக்கக்கூடாது என்று அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மருத்துவக்கழிவு ஆலையை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தே.புடையூர் ஊராட்சியில் மொத்தம் 1,237 வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக தே.புடையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் கிராம மக்கள் தெரிவித்திருந்த படி காலை 9 மணிவரை யாரும் வாக்களிக்க வரவில்லை.

இதனால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ், வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் பிரியா ஆகியோர் வீடு வீடாக சென்று, வாக்களிக்க வருமாறு, அழைப்பு விடுத்தனர். மதியம் 5 மணி வரை 266 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. தொடர்ந்து போலீசார் வாக்காளர்களை அழைத்து வந்து வாக்களிக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story