வேலூர், ராணிப்பேட்டையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
வேலூர், ராணிப்பேட்டையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
வேலூர்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கும், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது.
வாக்குப்பதிவு முடிந்ததும் ‘சீல்’ வைக்கப்பட்ட குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வேலூர் தந்தைபெரியார் பொறியியல் கல்லூரிக்கும், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கும் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப்படை வீரர்கள், உள்ளூர் போலீசாரைக்கொண்டு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் சுழற்சிமுறையில் துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.