கலசபாக்கம் அருகே கிணற்றை ஆழப்படுத்திய போது கயிறு அறுந்து விழுந்து 5 பேர் பலி ஒருவர் படுகாயம்


கலசபாக்கம் அருகே கிணற்றை ஆழப்படுத்திய போது கயிறு அறுந்து விழுந்து 5 பேர் பலி ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 19 April 2019 10:45 PM GMT (Updated: 19 April 2019 2:42 PM GMT)

கலசபாக்கம் அருகே கிணற்றை ஆழப்படுத்தியபோது கயிறு அறுந்து விழுந்து 5 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கலசபாக்கம், 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த காஞ்சி அருகில் உள்ள ஆலத்தூர் பகுதியில் உள்ள பாசன கிணற்றை ஆழப்படுத்தும் பணி நேற்று நடந்தது. காஞ்சி தாமரைபாக்கம் பகுதியை சேர்ந்த பிச்சாண்டி (வயது 51), ரவி (49), தணிகாசலம் (50), ஜெயமுருகன் (25), அல்லியந்தல் பகுதியை சேர்ந்த வேலு (35), பெரியகிலாம்பாடியை சேர்ந்த மாணிக்கம் (49) ஆகிய 6 தொழிலாளிகள் இந்த பணியில் ஈடுபட்டனர். இந்த கிணறு சுமார் 100 அடி ஆழம் கொண்டதாகும்.

கிணற்றின் அருகில் பாறைகள் அதிகம் இருந்ததால் வெடி வைப்பதற்காக இவர்கள் 6 பேரும் கிரேன் எந்திரத்தின் மூலம் மரப்பெட்டியில் கயிறு கட்டி அதன் மூலம் கிணற்றில் இறங்கினர். கிணற்றில் வெடி வைத்து விட்டு மீண்டும் மரப்பெட்டியில் ஏறி கிரேன் மூலம் வெளிவர முயன்றனர்.

பாதி தூரம் வரும் போது கிரேனில் இருந்த கயிறு திடீரென அறுந்து விழுந்தது. இதனால் கிணற்றில் விழுந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு மற்றும் திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பார்த்தபோது பிச்சாண்டி, ரவி, தணிகாசலம், ஜெயமுருகன், வேலு ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மாணிக்கம் படுகாயத்துடன் உயிருக்கு போராட்டி கொண்டிருந்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கிணற்றில் விழுந்து உயிரிழந்த 5 பேரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டனர். உயிரிழந்தவர்களிள் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போர் கண்களையும் கலங்க வைத்தது.

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில் இச்சம்பவத்தில் உயிரிழந்த 5 பேருக்கும் இழப்பீடு வழங்கக் கோரி அவர்களது உறவினர்கள் காஞ்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story