சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 20 April 2019 4:30 AM IST (Updated: 19 April 2019 9:47 PM IST)
t-max-icont-min-icon

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம், 

தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர மீதமுள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 1,803 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. சேலம் சூரமங்கலம் ராமலிங்க வள்ளலார் பள்ளியில் மின்னணு வாக்கு எந்திரம் பழுதானதால் அந்த வாக்குச்சாவடியில் மட்டும் ஒரு மணிநேரம் கூடுதலாக இரவு 7 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 77.39 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 12 லட்சத்து 46 ஆயிரத்து 483 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன், சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. ஒருசில வாக்குச்சாவடியில் மட்டும் நேற்று அதிகாலை வரையிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் 6 சட்டமன்ற தொகுதிகள் அடிப்படையில் தனித்தனியாக அறைகளில் பாதுகாப்பாக வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ரோகிணி, தேர்தல் பார்வையாளர் (பொது) ராஜேஷ் மஞ்சு ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர், ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைத்து 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த அறைகளின் முன்பு வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதாவது, முதல் அடுக்கில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரும், 2–வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், 3–வது அடுக்கில் ஆயுதப்படை போலீசாரும், 4–வது அடுக்கில் உள்ளூர் போலீசாரும் என 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதவிர, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அடுத்த மாதம் 23–ந் தேதி வரை இந்த பாதுகாப்பு தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story