நெல்லை மாவட்டத்தில், பிளஸ்-2 தேர்வில் 94.41 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி மாநில அளவில் 8-வது இடம்


நெல்லை மாவட்டத்தில், பிளஸ்-2 தேர்வில் 94.41 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி மாநில அளவில் 8-வது இடம்
x
தினத்தந்தி 19 April 2019 10:30 PM GMT (Updated: 19 April 2019 7:34 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 94.41 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் 8-வது இடத்தை பிடித்தது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 94.41 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் 8-வது இடத்தை பிடித்தது.

94.41 சதவீதம் தேர்ச்சி

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நெல்லை மாவட்ட தேர்வு முடிவுகளை கலெக்டர் ஷில்பா வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் 317 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 38 ஆயிரத்து 662 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 36 ஆயிரத்து 501 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் 15 ஆயிரத்து 494 மாணவர்களும், 21 ஆயிரத்து 7 மாணவிகளும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது 94.41 சதவீதம் ஆகும். நெல்லை மாவட்டம் மாநில அளவில் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். கடந்த ஆண்டு மாநில அளவில் நெல்லை மாவட்டம் 10-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அரசு பள்ளிக்கூடங்கள்

இந்த மாவட்டத்தை பொறுத்த வரையில் 90 அரசு பள்ளிக்கூடங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 802 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 11 ஆயிரத்து 496 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இதன் மூலம் 89.80 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. அரசு பள்ளிக்கூடங்களை பொறுத்த வரையில் மாநில அளவில் 7-வது இடம் கிடைத்துள்ளது.

விடுமுறை நாட்களில் எந்த பள்ளிக்கூடங்களிலும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்கள் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கண்காணிக்கப்படும். பயிற்சி வகுப்புகள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

பேட்டியின் போது, நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரேணுகா (நெல்லை), சீனிவாசன் (தென்காசி), விஜயலட்சுமி (வள்ளியூர்), சம்பத்குமார் (சங்கரன்கோவில்), சுடலை (சேரன்மாதேவி) மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story