வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, கம்பம் வீரப்பநாயக்கன்குளத்தில் செத்து கிடந்த மீன்கள்


வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, கம்பம் வீரப்பநாயக்கன்குளத்தில் செத்து கிடந்த மீன்கள்
x
தினத்தந்தி 19 April 2019 11:00 PM GMT (Updated: 19 April 2019 7:36 PM GMT)

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், கம்பம் வீரப்பநாயக்கன்குளம் கரையோரத்தில் மீன்கள் செத்து கிடந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது.

கம்பம், 

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரை முல்லைப்பெரியாறு தண்ணீரை நம்பி 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. முல்லைப்பெரியாறில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் விதமாக கம்பம் பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வீரப்பநாயக்கன்குளம், உடைப்படிகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்கள் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளங்களின் சீரமைப்பு பணிகளில் பாசன விவசாயிகள் பங்கு பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு நீரினை பயன்படுத்துவோர் சங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இச்சங்கத்தின் மூலம் குளத்தை பராமரிப்பு செய்யவும் மற்றும் மீன் வளர்ப்பதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மீன்களை வளர்த்து பொதுப்பணித்துறை அனுமதியுடன் விற்பனை செய்தும் வருகின்றனர்.

அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீரப்பநாயக்கன்குளத்தில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வந்தன. மீன்கள் விற்பனைக்கு தயாரான நிலையில் குளத்தில் தண்ணீர் வற்றியது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மீன்கள் செத்து குளத்தின் கரையோரத்தில் ஒதுங்கின. இதனால் குளம் உள்ள பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. குளத்தின் கரை வழியாக நடைபயிற்சி மேற்கொள்பவர்களும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வீரப்பநாயக்கன்குளத்துக்கு தண்ணீர் வரத்து இல்லை. மேலும் குளத்தில் கழிவுநீர் கலக்கிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தால், கழிவுநீரில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு மீன்கள் இறந்து வருகின்றன என்றார்.

எனவே குளத்தின் கரையோரத்தில் செத்து கிடக்கும் மீன்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story