வாக்கு எண்ணும் மையத்தில், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்த அறைகளுக்கு ‘சீல்’ வைப்பு - 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


வாக்கு எண்ணும் மையத்தில், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்த அறைகளுக்கு ‘சீல்’ வைப்பு - 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 19 April 2019 11:00 PM GMT (Updated: 19 April 2019 8:18 PM GMT)

தேனியில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தேனி, 

தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் 1,781 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் கம்மவார் சங்க கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டன.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகளும் உள்ளடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை மண்டல தேர்தல் அலுவலர்கள் சேகரித்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வந்தனர்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சில படிவங்களை பூர்த்தி செய்வது, வாக்குப்பதிவு எந்திரங்களை ‘சீல்’ வைப்பது உள்ளிட்ட சில நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், பல இடங்களில் இந்த பணிகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செய்ய முடியாமல் திணறினர். பக்கத்தில் உள்ள பிற வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய அலுவலர்களை தொடர்பு கொண்டு சிலர் விவரங்களை கேட்டறிந்தனர். சிலர், வாக்குப்பதிவு எந்திரங்களை சேகரிக்க மண்டல தேர்தல் அலுவலர்கள் வரும் வரை காத்திருந்த சம்பவமும் நடந்தது.

இதுபோன்ற காரணங்களால் வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று காலை வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டன. நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக ஒரு அறையில் வைக்கப்பட்டன. ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டன.

இந்த 3 அறைகளும் நேற்று, மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் உபேந்திரநாத் சர்மா, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் பிரபாகரரெட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் சரளா ராய், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டன.

வாக்கு எண்ணும் மையத்துக்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்துள்ள அறையின் முன்பு துணை ராணுவ வீரர்களும், அந்த கட்டிடத்துக்கு வெளியே தமிழக சிறப்பு பாதுகாப்பு படையினரும், வளாகத்தில் ஆயுதப்படை பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவுவாயில் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ளூர் போலீசார் பணியில் உள்ளனர். சுமார் 200 போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story