ரிஷிவந்தியம் அருகே, வாகனம் மோதி தாய்-மகன் பலி - கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


ரிஷிவந்தியம் அருகே, வாகனம் மோதி தாய்-மகன் பலி - கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 April 2019 11:00 PM GMT (Updated: 19 April 2019 8:18 PM GMT)

ரிஷிவந்தியம் அருகே வாகனம் மோதி தாய்-மகன் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி பூங்கொடி (வயது 40). இவர்களுடைய மகன் ஏழுமலை(17). இவர் நேற்று முன்தினம் மாலை தனது தாய் பூங்கொடி, பாட்டி கண்ணு(60) மற்றும் உறவினருடைய 2 வயது குழந்தை ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் தியாகதுருகத்துக்கு சென்றார்.

பின்னர் இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ரிஷிவந்தியத்தை அடுத்த கீழ்பாடி அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று ஏழுமலை ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஏழுமலை சம்பவ இடத்திலேயே பலியானார். பூங்கொடி, கண்ணு ஆகியோர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பூங்கொடியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், கண்ணுவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். இதில் பூங்கொடி சிகிச்சை பலனின்றி இறந்தார். கண்ணுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 2 வயது குழந்தை காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

இதற்கிடையே கீழ்பாடி கிராம மக்கள், விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி, அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story