பா.ஜனதாவினரை தாக்கிய 7 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு


பா.ஜனதாவினரை தாக்கிய 7 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 20 April 2019 4:00 AM IST (Updated: 20 April 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே பா.ஜனதாவினரை தாக்கிய 7 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், பா.ஜனதா தொண்டர். இவர், நேற்று முன்தினம் அருமநல்லூர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து விட்டு வெளியே வந்தார். அப்போது அவருக்கும், அங்கு நின்ற காங்கிரசை சேர்ந்த சிம்சனுக்கும் தகராறு ஏற்பட்டது.

பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வீரவநல்லூர் பகுதியில் சதீஷ்குமார் மற்றும் பா.ஜனதா கட்சியினர் சிலர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது 4 மோட்டார்சைக்கிள்களில் சிம்சன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் வந்தனர். அவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பா.ஜனதா கட்சியினரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் சதீஷ்குமாருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் மணிகண்டன், சரவணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், காங்கிரசை சேர்ந்த அஜித்குமார் (வயது 22), பால்மணி (42), திதியோன் (22), ஜெபமணி (45), சஜின் (20), சிம்சன் (48), சுனில் ஆகிய 7 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story