தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக புகார்: மதுரை ஐகோர்ட்டு ஆணைக்குழு நெல்லையில் ஆய்வு
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு ஆணைக்குழுவினர் நெல்லையில் நேற்று ஆய்வு செய்தனர்.
நெல்லை,
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு ஆணைக்குழுவினர் நெல்லையில் நேற்று ஆய்வு செய்தனர்.
பாதாள சாக்கடை திட்டம்
நெல்லை மாநகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடையில் சேரும் கழிவுநீர் ராட்சத குழாய் மூலம் நெல்லையை அடுத்த ராமையன்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அங்கு பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் தாமிரபரணி ஆற்றில் விடப்படுவதாக பல்வேறு தரப்பினர் புகார் கூறி வந்தனர்.
ஐகோர்ட்டில் மனு
இதுதொடர்பாக ராமையன்பட்டியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் காட்டுராஜா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “ராமையன்பட்டியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படுகிறது, அந்த கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. குடிநீர் மாசுபடுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஒரு ஆணைக்குழுவை நியமித்தனர். இந்த குழுவில் வக்கீல்கள் ஜோசப், ஜீவசுந்தரி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
ஆணைக்குழுவினர் ஆய்வு
அந்த குழுவினர் நேற்று நெல்லை ராமையன்பட்டிக்கு வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் ராமையன்பட்டி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம், சத்திரம்புதுக்குளம், அருகன்குளம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது அந்த பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்டனர்.
இந்த ஆய்வின்போது, நெல்லை மாநகராட்சி தலைமை பொறியாளர் நாராயண நாயர், சுகாதார அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த ஆணைக்குழுவினர் ஆய்வு செய்தவற்றை அறிக்கையாக தயார் செய்து மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்கிறார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை நீதிபதிகள் அறிவிப்பார்கள்.
Related Tags :
Next Story